சாத்தான்குளம் விவகாரத்தை சி.பி.ஐ. இற்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள்- கமல் வேண்டுகோள்
29 Jun,2020
சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களின் வழக்கை சி.பி.ஐ. இற்கு மாற்றி பொறுப்பைத் தட்டிக்கழிக்காதீர்கள் என முதல்வர் எடப்பாடி பழநிசாமியிடம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டடுள்ள டுவிற்றர் பதிவில், “சாத்தான்குளம் வழக்கை CBIஇற்கு மாற்றி, பொறுப்பைத் தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதியே” என குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் உயிரிழந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைப் பிரிவுக்கு மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.