தன் வாழ்க்கை, சினிமா பயணம் குறித்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: என்னுடைய பயணம் வலி, வெற்றி, சந்தோஷம், காதல் கலந்த கலவை தான். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில் தான். ஹவுசிங் போர்டு ஏரியாவுல பிறந்து வளர்ந்த, 'லோயர் மிடில் கிளாஸ்' பொண்ணு நான்.அப்பா, அம்மா, மூணு அண்ணன்கள், நான்னு எங்க குடும்பத்துல மொத்தம் ஆறு பேர். எனக்கு, 8 வயசு இருக்கும்போது அப்பா இறந்துட்டார். அம்மா தான் படிக்க வெச்சு, எங்களுக்கு அப்பாவாக பார்த்துக்கிட்டாங்க.
என் அம்மா பெருசா படிக்கலை. ஆனா, எங்களைக் காப்பாத்த அவ்வளவு போராடினாங்க.
மும்பைக்குப் போய் புடவைகளை வாங்கிட்டு வந்து, சென்னையில ஒவ்வொரு வீடா போய் விப்பாங்க. எங்களை சாப்பிட வைக்க, எங்களை வளர்க்க, இது மாதிரி நிறைய பிசினஸ்
பண்ணுணாங்க.எனக்கு, 12 வயது இருக்கும்போது, மூத்த அண்ணன் இறந்துவிட்டார்.
இரண்டாவது அண்ணனும், அடுத்த சில ஆண்டுகளில், சாலை விபத்தில், எங்களை விட்டு போயிட்டார்.அப்போது தான், குடும்பத்துக்கு நம்மால முடிஞ்சதை செய்யணும்னு நினைச்சேன்.
பிளஸ் 1 படிக்கும்போது, வேலைக்குப் போனேன்.பெசன்ட் நகர்ல, ஒரு நாளைக்கு, 225 ரூபாய் சம்பளம். அப்புறம், 'பர்த்டே பார்ட்டி' மாதிரி நிறைய நிகழ்ச்சிகள், 'ஹோஸ்ட்' பண்ண ஆரம்பிச்சேன். அதுல 500, 1,000-னு சம்பளம் வரும். அந்த
நேரத்தில், 'டிவி' சீரியல் வாய்ப்பு வந்தது. ஒரு நாளுக்கு, 1,500 ரூபாய் தருவாங்க. ஆனா,
மாசத்துல ஆறு நாட்கள் தான் வேலை இருக்கும். டான்ஸ் கத்துக்கிட்டு, ஒரு தனியார், 'டிவி'யில் நடன நிகழ்ச்சியில் ஜெயிச்சேன். அதை வெச்சு, சினிமா சான்ஸ் தேடினேன்.
நான் நடிச்ச முதல் படம், அவர்களும் இவர்களும்! அது சரியா போகலை. தொடர்ந்து வாய்ப்பு தேடிக்கிட்டே இருந்தேன். மூணு வருஷத்துக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கலை.அட்டக்கத்தி
படத்துல அமுதாங்கிற சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அந்த ரோல் என்னை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்தது. அப்புறம், பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ் படங்கள்ல, 'லீட் ரோல்'ல நடிச்சேன்.
காக்கா முட்டை படம் தான், என் வாழ்க்கையையே மாத்தி அமைச்சது. அந்தப் படத்தின்
இயக்குனர் மணிகண்டன் தான், எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தார். ஒரு சிலர், என்
திறமைக்கு மரியாதை கொடுத்து, வாய்ப்பு கொடுத்தாங்க.கனா படத்தில் நடிப்பதற்காக, ஆறு மாசம், கிரிக்கெட் விளையாட கத்துக்கிட்டேன். அந்தப் படம், எல்லாத்தையும் மாத்திச்சு.
இதைத் தொடர்ந்து, நிறைய கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள்ல நடிக்க வாய்ப்பு வருது. இது எல்லாத்துக்கும், என் மேல நான் வெச்ச நம்பிக்கை தான் காரணம்!