50 வருடங்கள். 5 முதல்வர்கள்.’கம்முனு கட’கண்ணம்மாவுக்கு பிறந்தநாள்!
26 May,2020
மன்னார்குடியில் பிறந்தவர், குடும்ப சூழல் காரணமாக தனது 11ம் வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்தில் கலக்கிய கோபிசாந்தாவின் பெயர் மனோரமாவாக மாறியது. துணை நடிகை, நகைச்சுவை நடிகை, நடிகர்களுக்கு அம்மா, பாட்டி என பல கதாபாத்திரங்களில் நடித்து ஆச்சி மனோரமாவாக மாறினார். கின்னஸ் சாதனை 1958ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான ‘மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் அறிமுகமான மனோரமா, 50 ஆண்டுகள் சினிமாவில் கொடி கட்டி பறந்தார். 2017ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படம் தான் மனோரமா நடிப்பில் வெளியான கடைசி படம். 1500-க்கும் மேற்பட்ட படங்கள், 5000 மேடை நாடகம் என தனது உயிர் மூச்சு மொத்தத்தையும் நடிப்புக்காக கொடுத்த மனோரமாவுக்கு கின்னஸ் சாதனை விருதும் வழங்கப்பட்டது.
ஐந்து முதல்வர்கள்
உலகிலேயே வேறு எந்த நடிகையும் செய்யாத பல சாதனைகளை நடிகை மனோரமா செய்து அசத்தியுள்ளார். எல்லாவற்றுக்கும் மகுடமாக ஐந்து முதல்வர்களுடன் மனோரமா நடித்தது சினிமா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் உடனும் மனோரமா நடித்து அசத்தியுள்ளார்.
மனோரமாவை மறக்க வைத்த கதபாத்திரங்கள்
1500 படங்களுக்கு மேல் நடித்து கலையுலக ராணியாக வலம் வந்த மனோரமாவின் சில கதாபாத்திரங்கள், அவரது பெயரையும் மறக்கடித்து ரசிகர்களின் மனங்களில் குடி கொண்டிருக்கும். தில்லானா மோகனாம்பாள் ‘ஜில் ஜில் ரமாமணி', சம்சாரம் அது மின்சாரம் படத்தின் ‘கம்முனு கட கண்ணம்மா', பாட்டி சொல்லை தட்டாதே ‘கண்ணாத்தா', மைக்கேல் மதன காமராஜன் ‘கங்காபாய்', இந்தியன் ‘குப்பம்மா' இன்னும் எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
நினைத்து உருகும் தமிழகம்
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகை மனோரமா மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி 2015ம் ஆண்டு உடல்நலக் குறைவால் இயற்கை எய்திய ஆச்சி மனோரமாவின் நினைவு அலைகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எப்போதும் நீந்துவர். மனோரமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல தொலைக்காட்சிகளில் அவர் நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன