திரையரங்குகளில் மீண்டும் திரைப்படங்களை பார்க்க முடியுமா?
24 May,2020
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பின்னர், மீண்டும் திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்க முடியுமா? என்பதுதான் சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதை செயற்படுத்தவும் தொடங்கிவிட்டன. பெரிய படங்கள், மாஸ் ஹீரோ நடித்த படங்கள் இவைதான் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அவ்வாறு திரையரங்குகளில் படம் வெளியாகும் பட்சத்தில் மக்கள் ஒவ்வொருவரும் போதிய சமூக இடைவெளியுடன் உட்காரும்படி இருக்கை வசதிகள் மாறும். மாஸ்க் மற்றும் சானிடைஸர் ரசிகர்கள் கட்டாயமாக கைவசம் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கண்ணாடி வழங்கப்படும். அது அவர்கள் சொந்தமாக வாங்க வேண்டியிருக்கும். மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாது போன்ற வைரஸை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக மும்பை உள்ளிட்ட பெரும் நகரங்களில் சினிமா திரையரங்குகளை பல புதுவித வசதிகளுடன் உருவாக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. திரையரங்குகள் ஜூலை 15 அல்லது ஜூலை இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்குள் எத்தனை படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்பத குறித்து எதுவித தகவலம் வெளியாகவில்லை.
மக்கள் ஆவலுடன் திரையரங்குகளில் இனி படம் பார்ப்பார்களா அல்லது அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி ஓடிடி தளங்களில் தொடர்வார்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
ஆனால் இணைய வசதிகள் ஏதுமில்லாத சாதாரண ரசிகர்களைப் பொறுத்தவரையில் சிறிய படமாக இருந்தாலும் சரி பெரிய படமாக இருந்தாலும் திரையரங்குகளில் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.