என் நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் - நடிகர் அருள்தாஸ்
09 May,2020
கொரோனா ஊரடங்கு உத்தரவால் சினிமா உலகம் மிகவும் பாதிப்படைந்து உள்ளது. தயாரிப்பாளர்கள் அதிக சிரமத்தில் இருப்பதால் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்கள்.
தற்போது நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம் எனது இயக்குனர்கள், உதவி இயக்குநர்கள் தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்!
வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்!
இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.
தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. இது ஒரு நல்ல துவக்கம்! அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.
எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன் என்றார்.