ஹாலிவுட்டை மிரட்டும் கொரோனா.... மேலும் ஒரு நடிகர் பலி
08 May,2020
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். 38 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. பிரபலங்களும் இந்த நோயில் சிக்கி மடிகிறார்கள். தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் அண்டோனியா போலிவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவரை தெற்கு கொலம்பியாவில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. சிரோ குர்ரா இயக்கிய எம்ப்ராஸ் ஆப் தி செர்பன் படத்தில் அண்டோனியா போலிவர் நடித்து பிரபலமானார். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், டிராய் ஸ்னீட், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.