கொரோனா வைரஸ் நோயின் தாக்குதல் இந்தியா முழுக்க வேகம் எடுத்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் 4 தென்னிந்திய மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழகம் முழுக்க விஜய்யின் உத்தரவின் பேரில் மக்கள் மன்றத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:- விஜய் எப்போதுமே தான் அளிக்கும் உதவிகள் நேரடியாக மக்களை சென்று சேர வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். கஜா புயலின் போது மாவட் டங்களில் இருக்கும் தனது மன்ற தலைவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பி உதவி செய்ய வைத்தார்.
கொரோனா தொடங்கிய உடனே மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக தமிழ்நாடு முழுக்க இருக்கும் நிர்வாகிகளை தீவிரப்படுத்தினார். தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்ட செயலாளர்கள், மற்றும் கேரள, ஆந்திர, கர்நாடக, தெலுங்கானா நிர்வாகிகளுக்கும் தகவல்கள் பறந்தன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு சானிடைசர்கள், மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இரவு பகல் பாராமல் சேவையாற்றும் காவல்துறை, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு டீ, சாப்பாடு வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து பணமாலையுடன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவையில் இரவுநேரங்களில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் திட்டக்குடி பகுதிகளில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு உதவிகள் செய்து வருகின்றனர். தஞ்சாவூர், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிறந்தநாள் அன்று தொடக்கப்பட்ட விலையில்லா விருந்தகம் மூலம் இலவச உணவு வழங்கப்படுகிறது.
இவை அனைத்துமே மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய்யின் கவனத்துக்கு சென்றுவிடுகிறது. தினமும் அவரிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் அறிவித்த நிவாரணத்தொகை தவிர கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களை கணக்கெடுத்து இன்று அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக உதவித்தொகையை செலுத்தி இருக்கிறார்.
விஜய் தனது கையில் இருந்து அளிக்கும் இந்த தொகை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் பயனடைய இருக்கிறார்கள். மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் அடிக்கடி பேசும் விஜய் தமிழக மக்களின் நிலையை கவனத்தில் எடுத்து விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் நிர்வாகிகள் யாரும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறார்.
மாஸ்டர் படம் தள்ளிபோனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் ரசிகர்கள், பொதுமக்களின் உயிர் தான் முக்கியம். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வருவதற்கு மாஸ்டர் படம் முக்கிய காரணமாக அமையப்போகிறது. சினிமாத்துறையே அதைத்தான் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்