87 ஆவது அகவையில் சம்பந்தன்!!
06 Feb,2020
சிரேஷ்ட அரசியல்வாதியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனின் 87 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
சட்டத்தரணியான இராஜவரோதயம் சம்பந்தன் 1956 ஆம் ஆண்டு இலங்கை தமிரசுக் கட்சியில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட இராஜவரோதயம் சம்பந்தன் மக்கள் ஆணையைப் பெற்று பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணை பொருளாளர், உபதலைவர் மற்றும் பொதுச் செயலாளராகவும் அவர் பதவி வகித்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியபோது அதன் தலைமைப் பதவியும் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வந்த பல தேர்தல்களில் அவருக்கு மக்கள் ஆதரவு கிடைத்திருந்தது.
2014 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை அவர் மாவை சேனாதிராசாவிடம் ஒப்படைத்தார்.
2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.
இந்தப் பதவிக்கு வந்த இரண்டாவது தமிழ் தலைவர் என்ற பெருமையும் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு உண்டு.
பல சவால்களுக்கு மத்தியில் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் இராஜவரோதயம் சம்பந்தன், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நன்மதிப்பை பெற்ற இராஜதந்திரம் மிக்க ஒரு தலைவராகவும் விளங்குகிறார்.