வட்டித் தொழில் செய்தாரா நடிகர் ரஜினிகாந்த்?
31 Jan,2020
வட்டித் தொழில் செய்யவில்லை என்று முதலில் மறுத்துவிட்டு, பின்னர் அந்த தொழிலில் ஈடுபட்டதாக நடிகர் ரஜினிகாந்தே வருமான வரித்துறையிடம் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 கோடியே 63 லட்ச ரூபாய் கடன் கொடுத்து, அதற்கு வட்டியாக 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஈட்டியதாக 2002-2003ஆம் ஆண்டுக்கு தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையில், 1 கோடியே 95 லட்ச ரூபாயை 18 சதவீத வட்டிக்கு கோபாலகிருஷ்ண ரெட்டி என்பவருக்கு ரஜினிகாந்த் கடனாக கொடுத்துள்ளார். இதேபோல அர்ஜுன்லால் என்ற பைனான்சியருக்கு 60 லட்ச ரூபாயும், சசிபூஷன் என்பவருக்கு 5 லட்ச ரூபாயும், சோனு பிரதாப் என்பவருக்கு 3 லட்ச ரூபாயும் கடன் கொடுத்துள்ளார். அதற்கடுத்த 2003-2004ஆம் ஆண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு மேலும் 10 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அந்த ஆண்டில் ரஜினிகாந்த் வட்டியாக 1.99 லட்ச ரூபாய் ஈட்டியுள்ளார். ஆனால் அதற்கடுத்த 2004-2005ஆம் ஆண்டில் 1 கோடியே 71 லட்சம் ரூபாயை வாராக்கடன் என்பதால் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், இதனால் 33.93 லட்ச ரூபாய் இழப்பு என்றும் கணக்கு காட்டியுள்ளார்.
இதில், சந்தேகம் எழுந்து ஆய்வு செய்தபோது, தான் வட்டித் தொழிலில் ஈடுபடவில்லை என்றும், தன்னுடைய நண்பர்களுக்கே கடன் கொடுத்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை வருமான வரித்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், பின்னர் வருமான வரித்துறைக்கு எழுதிய கடிதத்தில், தான் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலை செய்ததாகவும், எனவே அதை “பிசினஸ் இன்கம்” கணக்கில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் வட்டித் தொழில செய்யவில்லை என்றும் பிறகு செய்ததாகவும் ரஜினி மாறி மாறி வருமானவரித்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.