இலங்கை செல்ல ரஜினிகாந்திற்கு விசா மறுப்பு?; உண்மை
17 Jan,2020
தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், அரசியல் ரீதியான பயணங்களுக்கு அவருக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் கூறியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறித்த செய்தியினை மறுத்துள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், ‘ரஜினிகாந்திற்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.
அத்துடன் இந்தியாவின் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இரு உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்த விடயம் குறித்து நாம் விசாரித்தோம்.
அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பது இதன்போது உறுதி செய்யப்பட்டது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து எமது உயர்ஸ்தானிகராலயங்களுக்கு எவ்வித விசா கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
ரஜினிகாந்துக்கு விசா வழங்க மட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சு எந்த சந்தரப்பத்திலும் கூறவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.