நான் தலைமறைவாகவில்லை. கோவிலுக்கு போயிருந்தேன்
12 Jan,2020
பிரபல முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தினை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததற்காக, புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பினை வழங்க பலரும் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே நான் பட நிறுவனம் தொடங்கினேன். அவர் நடித்த எலி படத்தினால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக 2 படங்களில் நடித்து தருவதாக வடிவேலு உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். வடிவேலுவை போலீஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனை வடிவேலு மறுத்துள்ளார். என்னை களங்கப்படுத்ததான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. நான் தலைமறைவாகவில்லை. கோவிலுக்கு போயிருந்தேன்” என்று கூறியுள்ளார்.