தமிழ் சினிமா: ‘கதாநாயகர்கள் அரசியல் வசனத்தால் எங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது’
29 Dec,2019
மார்ச் 1, 2020 முதல் திரையரங்குகள் மூடப்படும் என கோவையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு திரையரங்குகளுக்கு விதிக்கும் 8% கேளிக்கை வரியை உடனடியாக திரும்பபெற வேண்டும், முன்னனி நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்தால், அந்த நடிகர்கள் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் குறைந்த சம்பளத்தில் மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு படம் நடித்துக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்பிரமணியம், ”மார்ச் 1ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது, இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பதை உணர்த்துவதற்காகத்தான்,” என்றார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு எனக் கூறி அமல்படுத்தப்பட்ட 28% ஜி.எஸ்.டி வரியோடு மாநில அரசின் 8% வரியையும் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஏற்கனவே பல திரையரங்குகள் மூடப்பட்டு, எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசின் வரியை ரத்து செய்ய வேண்டும், என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை,” என பிபிசி தமிழின் மு.ஹரிஹரனிடம் கூறினார் திருப்பூர் சுப்பிரமணியம்.
படம் வெளியாகி 100 நாட்களுக்குள் ஆன்லைன் டிஜிட்டல் தளங்களில் தயாரிப்பாளர் படத்தை வெளியிடக்கூடாது என்கிற கோரிக்கையும் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.
”திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் நேரடியாகவே சேனல்களுக்கும், ஆன்லைன் டிஜிட்டல் தளங்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுக்கலாமே. ஆனால், அவர்கள் அதை செய்வதில்லை. திரையரங்குகளில் வெளியிட்டபின்னர்தான் ஆன்லைனிலும், சேனல்கலிலும் படங்கள் வெளியாகின்றன. உலக அளவில் இந்தி திரைப் படத்துறைக்கு மிகப்பெரும் சந்தை இருக்கிறது. அவர்களே படம் திரையரங்கில் வெளியாகி 56 நாட்களுக்கு பின்னர்தான் மற்ற தளங்களில் படத்தை வெளியிடுகின்றனர். எனவே, தமிழ் திரைத்துறையிலும் இதேபோல் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.
தமிழ் திரைத்துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பற்றி யோசிக்காமல் சுயநலமாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார் சுப்பிரமணியம்.
”படத்திற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்வதோடு, கதாநாயகர்கள் ஒதுங்கிக்கொள்கின்றனர். படம் நஷ்டம் அடைந்தால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பற்றி கதாநாயகர்கள் யோசிப்பதில்லை. எனவே, இனிமேல் உச்ச நட்சத்திரங்களின் படம் தோல்வி அடைந்தால், அதே தயாரிப்பாளருக்கு குறைந்த சம்பளத்தில் படம் நடித்துக்கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். இல்லையேல், சதவிகித அடிப்படையில் கதாநாயகர்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்கிறார் சுப்பிரமணியம்.
மேலும், கதாநாயகர்கள் அரசியல் வசனங்களை பேசி படம் வெளியிடுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். இதிலும் திரையரங்க உரிமையாளர்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறினார்.
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி புதிய படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன, அந்த படங்கள் வெளியான பிறகு திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தார்கள் கலந்தாலோசித்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.