சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்!
24 Dec,2019
மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார். இந்த விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.
இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சித்தரிக்கும், மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திரைப்படத்துக்கான விருது விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் இயக்கிய “ஜிடி நாயுடு – தி எடிசன் ஆப் இந்தியா” திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படத்திற்கான விருந்து குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட ‘ஹெல்லாரோ’ வுக்கு வழங்கப்பட்டது. ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.
இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது. இதே போன்று மொத்தம் 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றார். தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.