'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் 10 சுவாரஸ்ய தகவல்கள்
01 Dec,2019
'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. 2016 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கினாலும் பல்வேறு காரணங்களால், சர்ச்சைகளால் தாமதமாகி இன்று வெளியாகியுள்ளது.
1. "எனை நோக்கி பாயும் தோட்டா" தமிழ் காதல் திரில்லர் திரைப்படமாகும். கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்த படமாகும்.
2. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தின் திரைக்கதைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக முதன்முதலாக தெரிவித்தார். இதில் சூரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
3. கடைசியாக இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். ராமகுரு (அறிமுகம்), இயக்குநர் சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ் - கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் அணி சேரும் முதல் படம் இது. இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு 55 நாட்கள் நடைபெற்றது.
4. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஒரு பக்க கதை” திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதிக்க வந்தார் நடிகை மேகா ஆகாஷ். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 2016ல் பணிகள் தொடங்கிய 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திலும் நாயகியாக நடித்தார் இவர். ஆனால், 4 ஆண்டுகளாக படத்தின் வெளியீடு தள்ளி தள்ளிப் போய் இப்போதுதான் வெளியாகிறது. ஆனால், அதன் பிறகு அவர் ரஜினியோடு ஜோடி சேர்ந்து நடித்த 'பேட்ட' படம் வெளியாகிவிட்டது. எனவே, தமிழில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வெளியான முதல் படம் 'பேட்ட' என்று ஆனது.
5. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்தாலும், பல்வேறு சிக்கல்களால் திரைப்படம் வெளியாவது பல முறை தள்ளி போயுள்ளது. 2016 டிசம்பரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் தனுஷ் தனது இன்னொரு படமான மாரி 2 ஐ முடிக்க வேண்டும் என நேரம் தர மறுத்துவிட்டதால் தயாரிப்பு பணி தாமதமானது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிவரும் இன்னொரு படமான "துருவ நட்சத்திரம்" வேலைகளால் 2017 ஜனவரியில் தாமதம் ஏற்பட்டது. நிதி பிரச்சனையும் தாமதத்திற்கு காரணமானது. இறுதியில் நவம்பர் 15ம் திகதி நிச்சயம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வெளியாகின. ஆனால் அப்போதும் வெளியாகவில்லை.
6. படத்தின் தமிழக உரிமையை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
7. இசையமைப்பாளர் பெயரை வெளியிடாமல் ரகசியம் காத்த கௌதம் மேனன் பின்னர் அவரை மிஸ்டர் எக்ஸ் என்று குறிப்பிட்டார். 2017 அக்டோபர் மாதம் இசையமைப்பாளர் 'தர்புகா சிவா' என்ற தகவலை அவர் வெளியிட்டார்.
8. பிப்ரவரி 10ம் தேதி வெளியான "மறுவார்த்தை" என்ற பாடலுக்கு பின்னர், "நான் பிழைப்பேனா" என்ற பாடல் மார்ச் 25ம் தேதி வெளியானது. இந்த இரு பாடல்களையும் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் பிரபலம் அடைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
9. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இது சில முந்தைய திரைப்படங்களை நினைவூட்டுகிறது என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.
10. சற்று வயதானவராக தனுஷ் நடித்து வெளியான “அசுரன்” திரைப்படத்திற்கு பின்னர், காதல் வயப்படும் கதாபாத்திரத்தில் இளைஞராக தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார்