மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், அவருடைய ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சி.கே. குமரவேல், ஏ.சவுரிராஜன், மாநில செயலாளர்கள் கமீலா நாசர், முரளி அப்பாஸ், செய்தித்தொடர்பாளர் சினேகன், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீப்ரியா உள்பட நிர்வாகிகள் கமல்ஹாசனை வரவேற்றனர்.
தமிழகத்தின் குழந்தை
இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
உங்களுடைய அன்பு பல வருடங்களாக எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு கிடைக்கும் பட்டங்கள், பெருமைகளை விட சிறந்த பரிசு. நான் தமிழகத்தின் குழந்தை. 5 வயதில் இருந்து பல்வேறு தருணங்களாக என்னை கை தூக்கிவிட்டதன் விளைவாகவே இந்த மேடையில் நிற்கிறேன். உங்களுடைய அன்பை செயல்வடிவம் ஆக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. என்னிடம் காட்டும் அன்பை தமிழகத்திடமும் காட்டவேண்டும்.
அப்படி இருந்தால் என்னுடைய முனைப்பு இனிதாக நடக்கும். இதற்கான சாத்தியங்கள் இனிவரும் அடுத்தடுத்த காலங்களில் உங்களுக்கு ஏற்படும். டாக்டர் ஆகுவதற்கு எனக்கு 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. திறன் மேம்பாட்டு மையத்தை திறமையாக நடத்தமுடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு முதல் உதவிகள் வழங்கவேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யம் உணர்ந்திருக்கிறது. தொண்டர்கள் கரங்கள் இல்லாமல் இதனை செய்யமுடியாது. கொடியில் உள்ள சின்னம்போல் அத்தனை கைகளும் கூடவேண்டும். எனது நன்றியை செயல் மூலம் காட்டுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழர்கள் நலனே முக்கியம்
இதையடுத்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த், உங்களோடு இணைந்து செயல்பட தயார் என்று கூறியிருக்கிறார். எவ்வளவு சீக்கிரம் அந்த இணைப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்?
பதில்:- நீங்கள் எதிர்பாருங் கள். அது எப்போது நடக்கும் என்று இப்போது கூறமுடியாது. நாங்கள் சொல்லியிருப்பதை கவனித்து பார்க்கவேண்டும். நாங்கள் சொல்லியிருப்பது, தேவைப்பட்டால் என்பதுதான். தேவைப்பட்டால் இணைவோம். தமிழகத்துக்காக என்பதைத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். எங்கள் நட்பை விடவும் தமிழர்கள் நலன்தான் முக்கியமானது.
கட்சியில் இணைவாரா?
கேள்வி:- இணைவோம் என்று கூறுவது 2 கட்சிகளாக இருந்து செயல்படுவதா? அல்லது மக்கள் நீதி மய்யத்தில் ரஜினிகாந்த் இணைவார் என்று எடுத்துக்கொள்வதா?
பதில்:- இப்போது அதுபற்றி கேட்பது நியாயம் கிடையாது. தமிழகத்தின் நலனுக்காக உழைப்போம் என்ற நல்ல செய்தியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.