முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி!’- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்!
18 Nov,2019
முதலில் நல்லாட்சி.. அடுத்து தம்பிகளுக்கு வழி!’- கமல், ரஜினி இணைப்பை வலியுறுத்திய எஸ்.ஏ.சந்திரசேகர்!
விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, “கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் அண்ட் நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழாவை அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதனொரு பகுதியாக சமீபத்தில் பரமக்குடியில் கமலின் இல்லத்தில், அவருடைய அப்பா மறைந்த சீனிவாசனின் உருவ சிலையும், அதற்கு மறுநாள் சென்னை ஆழ்வார் பேட்டையில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60′ நிகழ்ச்சி நடந்தது. ரஜினிகாந்த், இளையாராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு, வடிவேலு, விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, “கமல் இன்னும் 60 ஆண்டுகள் திரையுலகில் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு பின்னர் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “ரஜினி கமல் இருக்கும் இந்த மேடையில் என் மனதில் பட்டத்தை சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். எந்த தொழில் செய்பவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாத்துறையினர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது தெரியவில்லை. கடந்த 50 வருடமாக சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான் ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது புதிதாக சினிமாவில் இருப்பவர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது.
ஒருகட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கமல் துணிச்சலோடு அரசியலில் இறங்கினார். அரசியலில் இறங்குவது சாதாரண விஷயம் கிடையாது. நிச்சயமாக கமல் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமலை போல் ரஜினியும் அரசியலுக்கு வர வேண்டும். தயவு செய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் ரஜினி. அதேநேரம் நீங்கள் இருவரும் சேர்ந்தால் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது. என் ஆசை மட்டுமே இது.
நீங்கள் இருவரும் இணையும்போது கலையுலகம் உங்கள் பின்னால் இருக்கும். இங்கு சிலர் தமிழன் இல்லை என்று பேசுகிறார்கள். தமிழகத்தின் தண்ணீரை குடித்துவிட்டாலே அவர் தமிழர்தான். நீங்கள் இருவரும் அரசியலில் இணைந்து பயணித்து தமிழகத்தில் நல்லாட்சி அமைக்கவேண்டும். இருவரும் முதலில் அரசியலுக்கு இறங்கி பிறகு அடுத்த தம்பிகளுக்கும் அரசியல் வாய்ப்பை வழங்க வேண்டும். அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும்” எனக் கூறினார்.