“இளையராஜாவை வெளியே தள்ளியது ஒரு அரசியல்வாதிதான்!” தீவிரமாகும் பிரசாத் ஸ்டூடியோ பஞ்சாயத்து
05 Nov,2019
அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து திரையிசை உலகின் `ராஜா’வாக இருப்பவர் இளையராஜா.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில்தான் இளையராஜாவின் கம்போஸிங், ரெகார்டிங் என அனைத்து வேலைகளும் நடக்கும். 40 ஆண்டுகளாக இதுதான் வழக்கம்.
அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் பிரசாத் ஸ்டூடியோவுக்குத்தான் செல்வார்கள். இந்நிலையில், அவருக்கு இடையூறு செய்வதாக எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளையராஜா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் இளையராஜா தரப்பு நீதிமன்றம் வரை செல்ல, இளையராஜா பணியாற்றிய ரெகார்டிங் அறை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தால் தற்போது பூட்டப்பட்டுள்ளது.
பிரசாத் ஸ்டூடியோ
இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோவுக்கும் என்னதான் பிரச்னை என்பதை விசாரித்தோம். “பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத், தான் பயன்படுத்தி வந்த அறையை இளையராஜாவுக்குக் கொடுத்துவிட்டார்.
அந்த அறைதான் நாற்பது ஆண்டுகள் கடந்தும் இளையராஜாவின் கம்போஸிங் ரூமாக இருந்து வருகிறது. எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத் நிர்வாகத்தைப் பார்க்கத் தொடங்கிய பின்பும் இந்தப் பயணம் அப்படியே தொடர்ந்தது.
பத்து வருடங்களுக்கு முன், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், `இளையராஜா சாருடைய பாடல்கள் எங்கள் ஸ்டூடியோவில் இருந்துதான் பிறக்கின்றன என்பது எங்களுக்குப் பெருமை. சாதாரண ஸ்டூடியோவாக இருந்ததைக் கோயிலாக மாற்றிவிட்டார்’ என்று பெருமையுடன் பேசியிருக்கிறார் ரமேஷ் பிரசாத்.
இந்நிலையில்தான் ஏழெட்டு மாதங்களுக்கு முன், அவரின் மகனும் எல்.வி.பிரசாதின் பேரனுமான சாய் பிரசாத் இளையராஜா தரப்பிடம், “எங்களுடைய பிசினஸ் எல்லாம் முன்பு போல் இல்லை.
எல்லாம் நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயன்படுத்தும் ஸ்டூடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையைக் கொடுத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கும் பயன்படும்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சம்மதித்த இளையராஜா, “மாதம் இவ்வளவு வாடகை என ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. மெயிலில் ஒப்பந்தத்தை அனுப்பியிருக்கிறார்கள்.
`பிரின்ட் எடுத்துக்கொண்டு வாருங்கள்; கையெழுத்துப் போட்டுவிடலாம்” என்று கூறியிருக்கிறது இளையராஜா தரப்பு. ஆனால், ஐந்து நாள்கள் கழித்து வந்த சாய் பிரசாத், “நாங்கள் இந்த இடத்தை இனி கொடுப்பதாக இல்லை. காலிசெய்யுங்கள். நான் இளையராஜா சாரைப் பார்க்கணும்” எனச் சொல்லியிருக்கிறார்.
இளையராஜா
இளையராஜா
மறுநாள் இளையராஜாவைச் சந்தித்து அவரிடம் இடத்தைக் காலி செய்யச் சொல்லியிருக்கிறார் சாய் பிரசாத். அதற்கு இளையராஜா “நான் 40 வருஷமா இங்கதான் இருக்கேன்.
ஒரு நாள்ல 20 மணி நேரம் கூட இங்கே இருந்திருக்கேன். என் குடும்பத்துடன் இருந்த நேரத்தைவிட இந்த ஸ்டூடியோவில் இருந்த நேரம்தான் அதிகம். திடீர்னு நீங்க காலி பண்ணுங்கனு சொல்றது சரியில்லை.
நாங்கதான் நீங்க கேட்குற வாடகையைத் தர்றோம்னு சொல்லிட்டோமே. அப்புறம் ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு சாய் பிரசாத் முறையான பதில் சொல்லாமல், “இந்த இடம் எங்களுக்கு வேண்டும். இதை வேறு மாதிரி மாற்றப்போகிறோம்” என்று சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு, மூன்று முறை வந்து இளையராஜாவை காலி பண்ணச் சொல்லியிருக்கிறது பிரசாத் ஸ்டூடியோ தரப்பு. ஆனால், இளையராஜா தரப்பு காலி செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறது.
ஆனால், அடுத்த இரண்டாவது நாள் இரவோடு இரவாக நிறைய மேஜை – நாற்காலிகள், கம்ப்யூட்டர்களை இளையராஜா ஸ்டூடியோவுக்குள் கொண்டுவந்து வைத்துவிட்டு “நாளையிலிருந்து எங்கள் ஆட்கள் இங்கேதான் வேலை செய்யப்போகிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது நிர்வாகம்.
இதனால் கோபமடைந்த இளையராஜா, தங்களின் வேலைக்கு இடையூறு செய்வதாகவும், அந்த இடத்திலேயே வேலை செய்ய அனுமதி வழங்கக்கோரியும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இளையராஜா
இளையராஜா
இத்தனை வருடங்களாக இளையராஜா அந்த இடத்தில்தான் இருந்திருக்கிறார். அது வரலாற்று இடமாக மாறிவிட்டது. அதனால் இந்த இடத்திலேயே தன்னுடைய பணி தொடரவேண்டும் என நினைக்கிறார் இளையராஜா.
நாற்பது ஆண்டுகளாக இளையராஜா தரப்பு மூலமாகவோ அல்லது படத்தின் தயாரிப்பாளர் மூலமாகவோ பிரசாத் ஸ்டூடியோவுக்குக் குறிப்பிட்ட தொகை போய்க்கொண்டுதான் இருந்திருக்கிறது.
ஆனால், இப்போது இடத்தை காலிசெய்யச் சொல்வதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் அந்த இடத்தை வாங்கியதாகவும், அதனால்தான் இளையராஜாவை வெளியே தள்ளியதாகவும் சொல்கிறார்கள்” என்கிறார் இளையராஜா தரப்புடன் மிக நெருக்கமான ஒருவர்.
இதுகுறித்து பிரசாத் ஸ்டூடியோ தரப்பிடம் பேசினோம். “இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களிடம் எதுவும் பேசக்கூடாது என முடிவெடுத்திருக்கிறோம். மேலும், வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று முடித்துக்கொண்டார்கள்.
இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ பிரச்னை தொடர்பாக திரையுலகப் பிரமுகர்கள் சிலரிடமும் பேசினோம். ஆனால், அவர்கள் யாரும் இவ்விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேச மறுத்துவிட்டனர்.