ரஜினிகாந்துடன் கூட்டணியா? : கமல்ஹாசன் பதில்
31 Oct,2019
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- கட்சி நடத்த உங்களுக்கு பணம் எங்கு இருந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு பதில்?
பதில்:- ‘என் பாக்கெட்டில் இருந்துதான் வருகிறது. என் கட்சியில் உள்ள பலரும் அவரவர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து போட்டுத்தான் கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ‘இங்கிருந்து வருகிறது. அங்கிருந்து வருகிறது’ என புரளிகள் எல்லாம் கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் செய்திருக்கிற செலவுகள் தேர்தல் கமிஷனுக்கு தெரியும். குறைந்த செலவில் நிறைய வெற்றியை பெற்றிருக்கிறோம். பணம் கொடுக்க மாட்டோம் என சொல்லிட்டு, கைத்தட்டலுடன் திரும்பி வந்த காட்சிகளும் உண்டு.
கேள்வி:- நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரேமாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?
பதில்:- அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்துகள் இல்லை. இருவரும் பேசி முடிவு செய்யவேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதா மரணத்தின் போது நீங்கள் சார்ந்தோருக்கு அனுதாபங்கள் என்ற பதிவிட்டது சர்ச்சையானதே?
பதில்: மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக் கூடியது. எல்லோருக்கும் நிகழ்ந்தே ஆகும். இது வாழ்த்து அல்ல. சாபமும் அல்ல. மரணத்துக்கு உண்டான மரியாதை கண்டிப்பாக உண்டு.
சார்ந்தோர்களுக்கும் அனுதாபம் என்பதும் உண்டு. சார்ந்தோர்க்கு இன்னும் உண்டு. அனுதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்