நடிகை ராகவியின் கணவர் தற்கொலை..! வாட்ஸ் அப் அவதூறால் விபரீதம்!
25 Oct,2019
நடிகை ராகவியின் கணவர் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடப்பட்ட அவதூறு தகவல் உயிரை பறித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர்.
அவரது சட்டைபையில் இருந்து கைப்பற்றப்பட்ட அடையாளர் அட்டை மூலம் அவர் பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம், லீலாவதி நகரை சேர்ந்த சசிக்குமார் என்பதும் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பின்னர் தான் தூக்கில் சடமாக தொங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் என்பது தெரியவந்தது
நடிகை ராகவி ஆரம்பத்தில் ராஜா சின்ன ரோஜா, மகராசன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளரான சசிக்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் திருமதி செல்வம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மனைவி ராகவியிடம் நடத்திய விசாரணையில் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்ட அவதூறு தகவல் தான் கணவரின் தற்கொலைக்கு காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த சசிக்குமார் வாடகைக்கு வெளியில் எடுத்துச்சென்ற கேமராவை மீண்டும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கேமரா தொலைந்து விட்டதாக சசிக்குமார் கூறிவந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் மகேஷ்குமார் என்பவர் சசிக்குமாரை கேமரா திருடன் என குற்றஞ்சாட்டி ஒளிப்பதிவாளர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் சசிக்குமாரை அழைத்து விசாரித்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலும் அவமானமும் அடைந்த சசிக்குமார், கடந்த 9 ந்தேதி வெளியில் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார் அதன் பின்பு சசிகுமார் வீடுதிரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் பெங்களூரில் இருந்து ஆம்பூருக்கு ரெயிலில் வந்து அங்கிருந்து ஜோலார் பேட்டை ஏரிகரைக்கு வந்த சசிக்குமார் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு சோகமுடிவை தேடிக் கொண்டது தெரியவந்துள்ளது. கணவர் சசிக்குமார் பலியான நிலையில் தனது மகளுடன் நடிகை ராகவி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒருவரை பற்றி முகநூல் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிடும் முன்பாக தீர யோசிக்க வேண்டும், அவதூறான செய்திகள் சிலருக்கு கடுமையான மன உளைச்சளை ஏற்படுத்துவதோடு உயிர்பலிவரை கொண்டு போய்விடும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்துள்ளது இந்த சோகசம்பவம்.