மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கும் பிக்பொஸ் நிகழ்ச்சி – கஸ்தூரி கடும் விமர்சனம்
13 Oct,2019
பிக்பொஸ் நிகழ்ச்சியானது பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாகவே அமைந்துள்ளதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கக் கூடியனவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இன்றைய சமூகத்தில் இரவு நேரத்தில் பெண் பிள்ளைகளை தனியாக கடைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.
நகரமயமாதல், இடம்பெயர்தல் ஆகியவற்றால் இன்றைக்கு சாப்பாடு வேண்டும் என்றால் கூட ஹிந்தியில் தான் கேட்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது.
தற்போது பெண்கள் பாதுகாப்பிற்கு மிக அதிகமாக முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு தனியாக மாநில பட்ஜெட்டில் ஒரு பகுதியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பிக்பொஸ் நிகழ்ச்சி என்பது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய நிகழ்ச்சி கிடையாது. அது பொழுது போக்குக்காக நடத்தப்படக்கூடிய நிகழ்ச்சி. அதுவே பொறுப்புள்ள பொழுது போக்காக இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.
இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களை ஒரு சிறிய வட்டத்தில் அடைக்க கூடியதாக உள்ளது. இந்த வருடத்தின் பிக்பொஸ் நிகழ்ச்சி பெண்களின் மதிப்பை குறைத்து மதிப்பிடும் நிகழ்ச்சியாக தான் இருந்தது. யார் வேண்டுமானாலும் எந்த கருத்தையும் சொல்லலாம். எனவே அவை குறித்து பேசுவது தேவையற்றது.
இன்றைக்கு தமிழ் நாட்டில் எந்த தலைவருக்கு சினிமாவோடு சம்பந்தமில்லை என்று சொல்ல முடியும்? சினிமாவில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் தான் இன்றைய அரசியலில் இருக்கிறார்கள். எந்த இடத்தில் நல்ல பொறுப்புள்ள மனிதர்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நாம் நம் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை” என்று அவர் கூறினார்.