பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களின் நடவடிக்கைகள் வெளியிலிருந்து நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், இம்மாதிரி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நடவடிக்கைகள் ஏன் அப்படி அமைகின்றன?
இந்தியாவில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகிவருகிறது. வங்காளம், மலையாளம் தவிர, பிற மொழிகளில் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.
முதன் முதலில் நெதர்லாந்தில் பிக் பிரதர் என்ற பெயரில் 1999 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலில் வரும் பிக் பிரதர் எல்லோரையும் கண்காணிப்பதுபோல, வீட்டில் இருப்பவர்கள் பல கேமராக்களால் கண்காணிக்கப்படுவதால் நிகழ்ச்சிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஜான் தே மால் ஜூனியர் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தார். இந்த நிகழ்ச்சியின் சர்வதேச உரிமம் நெதர்லாந்தின் என்டேமால் ஷைன் குழுமத்திடம் இருக்கிறது.
தமிழில் இந்த நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் ஹாசன் இருந்துவருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதி ஒளிபரப்பாகிவருகிறது.
முதல் சீஸனில் நடிகரும் மாடலுமான ஆரவ் வெற்றிபெற்றார். பாடலாசிரியர் சினேகன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இரண்டாவது சீஸனில் நடிகை ரித்விகாவும் வெற்றிபெற, ஐஸ்வர்யா தத்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறுபவர்களைவிட, நிகழ்ச்சியில் சர்ச்சைக்குள்ளானவர்கள், சக போட்டியாளர்களால் ஓரம்கட்டப்படுபவர்களே பெரிதும் கவனிக்கப்பட்டனர்.
முதலாவது சீஸனில் பங்கேற்ற நடிகர் பரணி, தன்னை சக போட்டியாளர்கள் துன்புறுத்துவதாக உணர்ந்ததால் சுவர் ஏறிக் குதித்து வீட்டைவிட்டு வெளியேற முயற்சித்ததார்.
அதே சீஸனில் பங்கேற்ற நடிகை ஓவியாவுக்கு பெரும் ஆதரவு இருந்த நிலையில், சக போட்டியாளர்களால் தான் ஒதுக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் கூறிய ஓவியா, வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்ததாகச் சொல்லப்பட்டது. பிறகு அவர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதேபோல, இந்த மூன்றாவது சீஸனிலும் பரபரப்பான, உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. காவிரி குறித்து தான் கூறிய ஒரு கவிதைக்காக வீட்டில் உள்ளவர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகக் கூறிய நடிகை மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டார். இதையடுத்து அவர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதேபோல, பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள நடிகர் கவினுக்கும் இலங்கையைச் சேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் லொஸ்லியா மரிய நேசனுக்கும் இடையிலான நட்பும், காதலும் பலத்த கவனிப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகிறது.
புதன்கிழமையன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லொஸ்லியாவின் தாய் – தந்தையர், தங்கள் மகள் மாறிப்போய்விட்டதாக வருந்தினர். “இதற்காகவா இந்த வீட்டிற்கு வந்தாய்” என அவரது தந்தை மரியநேசன் கேள்வியெழுப்பினார்.
ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வாழும் சிலரிடையே உருவாகும் நட்பு, உறவு எந்த அளவுக்கு உறுதியானது, அவர்கள் ஏன் அம்மாதிரியான உறவை வெகு சீக்கிரத்திலேயே உருவாக்கிக்கொள்கின்றனர், வெளியுலகில் இருந்தால் அதுபோல செய்வார்களா என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டுவருகின்றன.
“பிக் பாஸ் ஷோ என்பது முழுமையான ஒரு ரியாலிட்டி ஷோ எனச் சொல்ல முடியாது. அதில் காட்டப்படும் எல்லாமே நீங்கள் புரிந்துகொள்வதுபோன்ற உண்மை அல்ல. அதேபோல நீங்கள் கண்டிக்கும் வகையிலான பொய்யும் போலித்தனமும் அல்ல. இவற்றுக்கு மத்தியில்தான் அந்த நிகழ்ச்சி இயங்குகிறது.
நாம் மதிக்கக்கூடிய ஒருவர் – உதாரணமாக பெற்றோரை வைத்துக்கொள்வோம். அவர்கள் நம் முன்பாக இருக்கும்போது ஒரு மாதிரியும் இல்லாதபோது ஒரு மாதிரியும் நடந்துகொள்வோம். அதில் பிரச்சனையில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்றோர் இல்லாதபோது நாம் எப்படி நடந்துகொண்டாலும் அதை அவர்கள் பார்ப்பார்கள்.
அதேபோல, பெற்றோர் முன்பாக சில காரியங்களைச் செய்ய மாட்டோம். ஆசிரியர் முன்பாக சில காரியங்களைச் செய்ய மாட்டோம். ஆனால், நாம் அவர்கள் இல்லாதபோது இதையெல்லாம் செய்வோம் என அவர்களுக்குத் தெரியும். இந்த பிக் பாஸ் ஷோவில் அவையும் வெளிப்படையாக காட்டப்படுகின்றன. இவையெல்லாம் மிகச் சிக்கலான விஷயங்கள்” என்கிறார் மனநல மருத்துவரான டாக்டர் சிவபாலன்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் பங்கேற்பவர்களிடம் நிகழ்ச்சியின் தாக்கம் நெடு நாட்களுக்கு இருக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
“இந்தத் தாக்கம் இருவிதமாக இருக்கும். சக மனிதர்களையும் அவர்களது விருப்பங்களையும் மதிக்க வேண்டும் என்பது நேர்மறையான தாக்கம். அதே நேரம், மனிதர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படும். நாம் இல்லாதபோது என்ன பேசுகிறார்களோ என்ற பதற்றம், பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த பிறகும் இருக்கும்” என்கிறார் சிவபாலன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீஸனிலும் தவறாது சிலர் காதல்வயப்படுகின்றனர். சில நாட்களுக்குள்ளேயே இது நடக்கிறது. முதல் சீஸனின் ஓவியாவும் ஆரவும் காதல்வயப்பட்டனர். இரண்டாவது சீஸனில் மஹத்தும் யாஷிகா ஆனந்தும் காதல் வயப்பட்டனர். இந்த முறை கவினும் லொஸ்லியாவும் காதல் வயப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியிலிருந்து தற்போது வெளியேறிவிட்ட அபிராமி, முதலில் தனக்கு கவின் மீது க்ரஷ் இருப்பதாகத் தெரிவித்தார். பிறகு முகேன் ராவைக் காதலிப்பதாகக் கூறினார்.
நிஜ வாழ்வில் பல நாட்கள் தேவைப்படும் ஒரு நிகழ்வு, பிக் பாஸ் வீட்டிற்குள் உடனடியாக நடப்பது எப்படி?
“நிஜ வாழ்க்கை மிகப் பெரியது. உடனே எதுவும் முடிவெடுக்க வேண்டியதில்லை. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருப்பது அதிகபட்சம் 100 நாட்கள்தான். அதற்குள் பலவற்றை நிரூபித்தாக வேண்டியிருக்கிறது. பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. தவிர, அந்த வீட்டிற்குள் இருக்கும்போது பிரச்சனை ஏற்பட்டால், தனக்கு துணை நிற்க ஆட்கள் வேண்டும் என போட்டியாளர்கள் நினைக்கிறார்கள். ஒருபோதும் தான் தனிமைப்படுத்தப்பட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறார்கள். இதுதான் உடனடி உறவுகளை உருவாக்குகிறது. இந்த வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, இந்த உறவுகள் நீடிக்கலாம். அல்லது முடிந்துபோகலாம். ஆனால், அந்த வீட்டிற்குள் இருக்கும்போது அவை நிஜம் போல காட்சியளிக்கின்றன” என்கிறார் சிவபாலன்.
ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மிக மோசமானவை என்கிறார் எழுத்தாளரும் ஆய்வாளருமான ராஜன் குறை. “மனித உணர்வுகளை எங்கே micro management செய்ய ஆரம்பிக்கிறார்களோ, அப்போதே அது மோசமான விஷயமாகிவிடுகிறது. ஒரு மனிதரை ஒரு கேமராவுக்கு முன்பாக இயல்பாக இருக்கச் சொன்னாலே இருக்க முடியாது. இத்தனை கேமராக்களுக்கு முன்பாக எப்படி இயல்பாக இருக்க முடியும்? இது மிகப் பெரிய மன அழுத்தத்தை பங்கேற்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்தும்” என்கிறார் ராஜன் குறை.
இது மனிதர்களை, மிருகங்களைப் போல நடத்துவதற்கு இணையானது என்கிறார் அவர்.
உண்மையில் அந்த வீட்டிற்குள் இருப்பது எப்படியான அழுத்தத்தை பங்கேற்பாளர்களுக்கு ஏற்படுத்துகிறது? நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரியிடம் கேட்டபோது, “நான் பிக் பாஸ் குறித்து பேச முடியாது. அதனால் அந்த நிகழ்ச்சியைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.
ஆனால், ரியாலிட்டி ஷோக்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மைதான் என்கிறார் கஸ்தூரி. “அமெரிக்காவில் ஸ்பெல்லிங் பீ என ஒரு ரியாலிட்டி ஷோ நடக்கிறது. அதில் பங்கேற்கும் குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பமே மன அழுத்தத்திற்கு ஆளாகிறது. ரியாலிட்டி ஷோக்களில் இதைத் தவிர்க்க முடியாது. இதனை அந்தத் தொலைக்காட்சிகள் ஊக்குவிக்கின்றன. அந்த மன அழுத்தத்தை தமக்கான பார்வையாளர்களாக மாற்றுகின்றன” என்கிறார் அவர்.