நாகேஷ் நினைவலைகள்: மூன்று முறை உயிர்த்தெழுந்த உன்னத கலைஞன்
28 Sep,2019
தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே?
அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, “இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்” என்பார் நகைச்சுவையாக.
படத்தின் காப்புரிமை தில்லு முல்லு
இந்த வசனத்தை அவர் வாழ்க்கையிலிருந்துதான் எடுத்துப் பேசி இருக்கிறார் போல.
ஆம். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அவரே விவரித்திருக்கிறார். ‘தாமரைக் குளம்’ என்ற படத்தில் நடிப்பதற்காக, அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், படம் முடிந்த பின்பும் அவருக்கு சம்பளம் தரப்படவில்லை. தயாரிப்பு நிர்வாகத்திடம் சென்று பேசுகிறார். அப்போதும் அவர்கள் அவருக்கு உரிய சம்பளத்தைத் தர மறுக்கிறார்கள். கோபமடைந்த நாகேஷ் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலிருந்த விக்கையும், காலிங் பெல்லையும் எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறார்.
இது ஏதோ கட்டுரையின் சுவாரஸ்யத்திற்காக மிகையாக எழுதப்பட்டது அல்ல. அவரே இது குறித்து எழுதி இருக்கிறார்.
வயிற்று வலி முதல் கோச்சடையான் வரை – நாகேஷ் திரைப்பயணம்
நாகேஷ் முதலில் நடித்தது ஒரு நாடகத்தில், வயிற்று வலி நோயாளியாக.
சில நிமிடங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்புள்ள அந்தக் காட்சியில், தனது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினார் நாகேஷ். இதற்காக நாடக மேடையில் எம்.ஜி.ஆர் கையால் விருதும் பெற்றார்.
இவரது கலைப்பயணம் இப்படி ஒரு சிறு காட்சியில் தொடங்கியது என்றால், அவரது திரைப்பயணம் அவர் இல்லாமலே முடிவடைந்தது.
அவரது இறுதிப் படத்தில் அவர் நடிக்கவில்லை.
என்ன குழப்பமாக இருக்கிறதா? இறுதியாக அவர் தோன்றிய படம் கோச்சடையான். அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியான இந்த அனிமேஷன் படத்தில், தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் திரையில் தோன்றினார் அவர்.
‘பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங்’ தொழில்நுட்பத்தில் திரையில் தோன்றிய அவருக்கு உடல் அசைவுகளைக் கொடுத்தது ரமேஷ் கண்ணா.
இங்கே அவரது திரைப் பயணத்தை ஆறு பத்திகளில் விவரித்திருந்தாலும், முதல் பத்திக்கும் கடைசி பத்திக்கும் இடையே உள்ள தூரம் குறைந்தது 600 திரைப்படங்கள்.
ஆம். ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் கணக்கின்படி, நாகேஷ் 600 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார்.
சர்வர் சுந்தரம், நீர் குமிழி, தில்லானா மோகானாம்பாள், திருவிளையாடல், மகளிர் மட்டும், தசாவதாரம் என அவர் நடித்த படங்களை பட்டியலிட்டாலே இந்தக் கட்டுரை ஆறு பக்கங்களுக்கு நீளும்.
மூன்று முறை உயிர்த்தெழுந்தவர்
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு நாகேஷின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட வைதீக குடும்பத்தில் பிறந்த நாகேஷின் பால்யகாலம் மிகவும் செளகர்யமானதாக, மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை.
கல்லூரி காலத்தில் மூன்று முறை அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் நாகேஷ். முகமெல்லாம் அம்மை தழும்புகளைச் சுமந்து கொண்டு, மிகவும் மனச்சோர்வில் , தன் அக்காவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார், “நான் சிரிக்கும் போது, கன்னத்தில் குழி விழக் கண்ட நீ, இனி நான் சிரிக்காமலேயே காண்பாய்”.
இதை நாகேஷே பின்னாளில் கல்கி இதழில் எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார்.
பாலசந்தரின் திரைப்படங்களில் நடித்து உச்சத்தை தொட்டார்.
ஊறுகாய் விற்ற நாகேஷ்
அம்மை நோயின் காரணமாகக் கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர் ஏதேதோ வேலைகளைச் செய்திருக்கிறார்.
மனு எழுதி தருபவராக, ஹைதராபாத்தில் ரேடியோ சேல்ஸ்மேனாக, ஊறுகாய் விற்பவராக, ஆலை கூலியாக என பல வேலைகளைப் பார்த்திருக்கிறார் நாகேஷ். ஆனால், அவரால் அப்போது எந்த வேலையிலும் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேல் பணியாற்ற முடியவில்லை. அந்த வேலைகள் அவருக்கு அலுப்பு தட்டியதுதான் அதற்கு முக்கிய காரணம்.
அந்த சமயங்களில் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டதாகக் கூறியிருக்கிறார் நாகேஷ்.
இது போன்ற சமயத்தில்தான் அவருக்கு இந்திய ரெயில்வேயில் வேலை கிடைத்துள்ளது. ஆனால், அந்த வேலையும் அவருக்கு அயர்ச்சி தந்திருக்கிறது. ரயில்வே வேலையில் செலுத்திய கவனத்தைவிட அதிக கவனத்தை அவர் நாடகங்களில் செலுத்தி இருக்கிறார். இது அலுவலகத்திற்குள்ளேயே மனக்கசப்பைத் தந்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமை கலக்கும் தெற்காசிய ‘பிரவுன் பெண்கள்’ – யார் இவர்கள்?
96 பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்: “மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்”
சீட்டாட்ட அனுபவம்
நாகேஷுக்கு சீட்டாட்டத்தில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக மிகவும் தர்மசங்கடமான சூழலில் சிக்கி இருக்கிறார். ஒரு முறை நாகேஷின் தந்தை தமக்கு மருந்து வாங்கி அனுப்பும்படி பணம் அனுப்பி இருக்கிறார். ஆனால், அந்த பணத்தைக் கொண்டு சூதாடி மொத்த தொகையையும் இழந்து, தந்தைக்கு மருந்து அனுப்ப முடியாமல் தவித்து இருக்கிறார் நாகேஷ். பின் தம் நண்பரின் மருந்துக்கடையில் கெஞ்சி மருந்து வாங்கி அனுப்பி இருக்கிறார்.
இதைப் பின்னாளில் அவரே வேதனையுடன் குறிப்பிடுகிறார். “ஒரு வேளை மருந்து கைக்குக் கிடைக்கும் முன்பு அப்பாவுக்கு உடம்பு சீரியஸாகி, ஒன்று கிடக்க ஒன்று ஆகி இருந்தால், அந்த பாவம் நெருஞ்சி முள்ளாக வாழ்நாள் முழுக்க என் நெஞ்சைக் குத்திக் கொண்டு இருந்திருக்கும்” என பின்னாளில் எழுதினார்.
நாகேஷாக விரும்பிய கமல்
மகளிர் மட்டும் படம் நினைவிருக்கிறதா? – பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சிக்கலை அப்போதே பேசிய படம் இது. இதில் பிணமாக நடித்திருப்பார் நாகேஷ். சில நிமிடங்களே திரையில் வரும் அந்தக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருப்பார் நாகேஷ் என விமர்சகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள்.
இந்தியில் அந்தப் படம் ‘லேடீஸ் ஒன்லி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தில் நாகேஷ் வேடத்தில் நடித்தவர் கமல்.
ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் வெளிவரவில்லை.
2016ம் ஆண்டு கமல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கமல் இவ்வாறாகச் சொன்னார், “நடிப்பிற்கான டி.என்.ஏ ஒன்றை அறிவியல் கண்டுபிடிக்குமானால், சிவாஜி உடலிலும், நாகேஷ் உடலிலும் இருந்த அதே நடிப்பு டி.என்.ஏ.தான் என் உடலில் இருக்கும்”.
இன்று நாகேஷின் பிறந்தநாள்.