சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை திறப்பு
05 Sep,2019
சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தனர்.
உலகப்புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்கட்சியகம் லண்டன், சீனா, அமெரிக்கா, ஆவுஸ்ரேலியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது. இந்தியாவிலும் டெல்லியில் இந்த அருங்கட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பிரபல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோரின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்கட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாளில் சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அவரது சிலையை வைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இந்த மெழுகு சிலையை திறந்து வைத்தனர்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிந்தியில் அனில் கபூருடன் நடித்து பெரும் வெற்றியடைந்த ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரம் வடிவில் இந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது