தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல்- மீராமிதுன் மீது வழக்குப்பதிவு
28 Aug,2019
தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீராமிதுன் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற இவர் மீது அழகிப் போட்டியை நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீராமிதுன், பின்னர் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்படி பல்வேறு பிரச்சினைகளில் பேசப்படும் நபராக மாறிய மீராமிதுன், நண்பர் ஒருவருடன் போனில் பேசிய ஆடீயோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தொழில் அதிபருமான எழும்பூரைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீனை கொலை செய்யும் எண்ணத்தில் அவர் பேசுவது போன்ற பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.
ஜோ மைக்கேலின் கை, கால்களை உடைத்து 6 மாதம் படுத்த படுக்கையாக இருக்க வைத்து விடுவோமா? இல்லை கொலை செய்து விடுவோமா? என்று தனது நண்பரிடம் மீராமிதுன் போனில் கேட்கும் இந்த ஆடியோவே இப்போது அவருக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
மீராமிதுன்
மீரா மிதுனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ஜோ மைக்கேல் பிரவீன் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் “ஈவன் மேனேஜ்மெண்ட்” என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 14-ந்தேதி இவரது அலுவலகத்துக்கு சென்ற மீராமிதுனின் மானேஜர் வெங்கட் சி.டி. ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் மீராமிதுன், வெங்கட், டோனி தினேஷ் ஆகியோரிடம் பேசும் விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
ஜோ மைக்கேலின் உயிருக்கு சேதம் விளைவிக்காமல், கை, கால்களை உடைக்க வேண்டும் என்று பேசும் மீராமிதுன், ஜோ மைக்கேலின் தாய், மனைவி, பிள்ளைகளை கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற பேச்சும் சி.டி.யில் இடம் பெற்றுள்ளது.
இதனை அடிப்படையாக வைத்தே ஜோ மைக்கேல் கடந்த 16-ந்தேதி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளார்.
இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மீராமிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபற்றி போலீஸ் கூறும்போது, “கொலை மிரட்டல் புகாரின் பேரில் சம்மன் அனுப்பி மீராமிதுனிடம் விசாரணை நடத்த உள்ளோம்.
இதன் பிறகே அவர் கைது செய்யப்படுவாரா? என்பது தெரியவரும்” என்றனர்.