1967இல் எம்.ஜி.ஆரையும் சரோஜாதேவியையும் இலங்கைக்கு அழைத்து வந்தவர்- பட்டக்கண்ணு தியாகராஜா
10 Aug,2019
சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள்.
இவர்களை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதுசெட்டித் தெருவில் அமைந்திருக்கும் பட்டக்கண்ணு நகையகத்துடன் இருக்கும் எமது இல்லத்திற்கு வந்தோம்.
இவ்வாறு பட்டக்கண்ணு நகையகத்தின் உரிமையாளர் சுப்பையா ஆச்சாரி தியாகராஜா தெரிவித்திருந்தார். அவர் அன்று பகிர்ந்து கொண்டவற்றில் மேலும் சில இதோஸ
எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட’அருக்குளா’ (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது.
எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. எங்கள் வீட்டின் முன்னால் கூட்டம் கூடத்தொடங்கியது.
ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது.
ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது.
அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை. அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள்.
எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.
எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீட்டினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம்.
இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.
ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு.
அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது.
எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.