பிக்பொஸ் வீட்டிலிருந்து எதிர்பாராமல் வெளியேற்றப்பட்ட சரவணன்
06 Aug,2019
தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் தமிழ் பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், பிக்பொஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். பஸ்ஸில் பெண்களிடம் தவறாக நடப்பது குறித்த அவரது பேச்சினால் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பொஸ் - 3 நிகழ்ச்சியில் திங்கட்கிழமையன்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் முடிவில், போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் திடீரென கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டார்.
அங்கு அவரிடம், "மீரா மிதுன் - சேரன் பிரச்சனை குறித்து கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது, பஸ்ஸில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காகவே சிலர் வருவது குறித்துப் பேசினார். அப்போது கையை உயர்த்திய நீங்கள், தானும் அப்படி நடந்திருப்பதாகக் கூறினீர்கள். அந்தத் தருணத்தில் மீரா - சேரன் பிரச்சனையால் இதைக் கவனிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு, ஜூலை 29ஆம் திகதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதற்காக மன்னிப்பும் கோரினீர்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது. பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை கண்டிக்கிறோம். இதன் காரணமாக, நீங்கள் பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் படுகிறீர்கள். உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள்" என்று சொல்லப்பட்டது.
உடனடியாக சரவணன் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார். அத்துடன் திங்கட்கிழமை நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
இரு வாரங்களுக்கு முன்பாக, நடந்த பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின்போது, இயக்குனர் சேரனுக்கும் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இயக்குனர் சேரன் தன் மீதான முன்பகையால் டாஸ்கின் போது கடுமையாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றம் சாட்டினார்.
ஆனால், நிகழ்ச்சியின்போது அவர் சேரன் மீது குற்றச்சாட்டை வைத்த விதம் அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் நேயர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வார இறுதியில் போட்டியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன், இருவருக்குமிடையேயான பிரச்சனை குறித்து விரிவாக அலசினார். சேரன் மீதான மீரா மிதுனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசுகையில், அப்படி என்றால் தங்களால் பஸ்களில் நெரிசலின்போது செல்ல முடியாது என்றும், அங்கு யாரும் வேண்டுமென்று வந்து இடிப்பதில்லை. ஆனால், சிலர் உரசுவதற்காகவே வரலாம் என்றும் கூறியிருந்தார்.
அப்போது சேரன் - மீரா இருவருக்கும் இடையே அமர்ந்திருந்த சரவணன் கையை உயர்த்தி, என்னுடைய கல்லூரி காலத்தில் நான் அவ்வாறு இடித்துள்ளேன் என்று கூற கூட்டத்தினரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
சரவணனின் இந்த கருத்தை கேட்டு கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் யதார்த்தமாக எடுத்து கொண்டதும், இப்படியொரு காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியதும், சரவணின் கருத்தை வரவேற்று பார்வையாளர்கள் கைத்தட்டியதும் பெரும் விவாவதத்தை கிளப்பியது.
சரவணன் தெரிவித்த கருத்துக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்மயி, "பொதுமக்கள் புழங்கக்கூடிய பஸ் சேவையில், ஒருவர் பெருமையாக பெண்களை இடிப்பதற்காக செல்வேன் என்கிறார். அதையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பரப்பியுள்ளது. இது பார்வையாளர்களுக்கும், கைத்தட்டும் பெண்களுக்கும், சம்பந்தப்பட்டவருக்கும் நகைச்சுவையாக இருக்கிறது." என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பிறகு பல பெண்கள் தங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை சின்மயிக்கு அனுப்ப, அவர் அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துவந்தார்.
இதற்குப் பிறகு பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த பிக்பொஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை ஹொட் ஸ்டாரிலிருந்து நீக்கினர்.
பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்குப் பிறகு, மற்றொரு போட்டியாளரான இயக்குனர் சேரனையும் சரவணன் மிக மோசமாகப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைப் பார்த்து வருந்திய பலர், இம்மாதிரி அவமானத்துடன் சேரன் நிகழ்ச்சியில் தொடர வேண்டுமா எனக் கேள்வியும் எழுப்பினர்.
இப்போது சரவணன் திடீரென பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்தும் டுவிட்டரில் பலர் கேள்வியெழுப்பிவருகின்றனர். அவரை வெளியேற்றச் சொல்லப்பட்ட காரணம், பொருத்தமாக இல்லையென்றும் அப்படியே வெளியேற்றுவதாக இருந்தால், வார இறுதியில் வெளியேற்றியிருக்கலாமே என்றும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்த வாரம், வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கான வாக்கெடுப்புப் பட்டியலில் அபிராமி, லொஸ்லியா, சாக்ஷி ஆகியோரோடு சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், வாரத்தின் முதல் நாளிலேயே சரவணன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.