திரைமறைவில் கைக்கோர்த்துள்ள மைத்திரி – சஜித்: அதிருப்தி தரப்புக்கள் ஒன்று கூடும் வாய்ப்பு
05 Aug,2019
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கூட்டில் பலமான மூன்றாவது அணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக இருதரப்பிலுமுள்ள நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்படாத பட்சத்திலும், பொதுஜன முன்னணிக்கும், சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலையிலும் இந்தப் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சியிலும் பொதுஜன முன்னணியிலும் அதிருப்தியில் உள்ள அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து பரந்து பட்ட பலமான மூன்றாவது அணியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
விசேடமாக இவ்வாறு உருவெடுக்கும் மூன்றாவது அணியானது ‘கஜசவித்த சமூக இளைஞர் முன்னணி’ என்று தற்போது இயங்கி வரும் அமைப்பின் பெயரில் தேர்தலில் களமிறங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பெயரில் களமிறங்குவதால் யானை சின்னத்தினை ஆதரிக்கும் கிராம மட்ட மக்களின் முழுமையான ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுடன் முரண்பட்டிருக்கையில் எவ்வாறு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து பணியாற்றுவார் என்பது தொடர்பில் ஆராயப்பட்டபோது, சமுக கட்டமைப்பு ரீதியாக இருவரும் கொண்டிருக்கும் அடையாளங்கள் காரணமாக இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக கடந்த ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் போது சஜித் பிரேமதாஸவை பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதும் அதனை அவர் மறுத்திருந்தார்.
இருப்பினும் தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பனிப்போர் உச்ச கட்டத்தினை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் எந்த சவாலையும் முகங்கொடுத்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்று சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது மேற்படி முயற்சியினை பின்னணியாக கொண்டு முதற்கட்டமாக அவர் தரப்பிலிருந்து ஐ.தே.க தலைமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐ.தே.க கூட்டணி
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியைப் பொறுத்தவரையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அவரின் கீழ் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவால் கடமையாற்ற முடியாது.
அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்கி பிரதமருக்கு அதிகாரங்களை வழங்குவதிலும் சிக்கலான நிலைமை ஏற்படும்.
மேலும் சஜித்துக்கு வேட்பாளர் பதவி வழங்கப்படுவதாயின் பிரதமர் ரணில் முழுமையாக அரசியலிலிருந்து விலக வேண்டும். எனினும் அது உடனடிச் சாத்தியமில்லை.
மறுபடியும் கதிர்காமம் மாநாட்டில் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதற்கு முன்மொழிந்த சபாநாயகர் கருஜயசூரியவை வேட்பாளராக நியமித்து முன்மொழிவுக்கு அமைய அம்முறையை முழுமையாக நீக்கி வெஸ்மினிஸ்டர் முறைமையை அமுலாக்க முயன்றால் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது வாய்ப்பாக இருக்கும் .
ஆகவே, ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக அரசியலில் நீடிக்கும் வரையில் சஜித் பிரேமதாஸவுக்கான வாய்ப்பு இங்கு கேள்விக்குறியாகின்றது.
அதேபோன்று பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐ.தே.கவின் பங்காளிகளாகவுள்ள தமிழ், முஸ்லிம் தரப்புகளும் சஜித் பிரேமதாஸவுக்கே ஆதரவை வெளியிட்டுள்ளன.
இதனால் சஜித் பிரேமதாஸவுக்கான வாய்ப்பு வழங்கப்படாதவிடத்தில் கட்சி மற்றும் கூட்டணியினுள் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன.
மஹிந்த அணி
மஹிந்த அணியைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைமையே அதிகமாக காணப்படுகின்றது.
எனினும், கோத்தாபய, சமல், பசில், தினேஷ், சிரந்தி என பட்டியல் நீண்டு செல்கின்றது.
ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து வேட்பாளர் நியமிக்கப்பட்டால் தீர்மானிக்கும் சக்திகளாகவிருக்கும் சிறுபான்மை தரப்புகளின் ஆதரவை பெறுவது கடினமாக இருக்கும் என்ற கருத்துகளும் அவ்வணிக்குள் வெகுவாக வலுத்துள்ளன. குறிப்பாக கோத்தாபயவுக்கு இடது சாரிக்கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.
அதேபோன்று மஹிந்தவின் குடும்பத்திற்குள்ளும் மறைமுக எதிர்ப்புகள் காணப்படுகின்றன. இதனைவிடவும் மஹிந்த அணியுடன் இணைந்துள்ள, இணையவுள்ள தரப்புகள் அதிகாரப்பகிர்வு கோத்தாபய எதிரானவர் என்பதால் 13ஆவது திருத்தச்சட்டத்தினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழியை எழுத்துமூலமாக பெறுவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.
இடதுசாரிகளின் கோரிக்கையை மீறி கோத்தாபய வேட்பாளராக களமிறக்கப்படுகின்ற போதும் தமிழ்த்தரப்புகளின் நிபந்தனைகள் ஏற்கப்படாத பட்சத்திலும் அங்கும் பிளவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மைத்திரிக்கான தெரிவு
இதேவேளை 2015இல் மஹிந்தவை தோற்கடித்தமையால் மீண்டும் அவருடன் கூட்டிணைவது தொடர்பில் அச்சமான மனநிலை ஜனாதிபதி மைத்திரிக்கு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன் பிரதமர் ரணிலுடனும் இணைவதென்பது சாத்தியப்படாது. தனித்து போட்டியிடும் முடிவெடுக்கின்ற பட்சத்தில் சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டு கட்சியின் தடமே இல்லாது போய்விடும் ஆபத்தும் உள்ளதாகக்கூறப்படுகின்றது. .
ஆகவே இந்த இரண்டும் கெட்ட நிலையில் தன்னையும் தனது கட்சியையும் பாதுகாப்பதென்றால் நம்பிக்கையான தெரிவு மூன்றாவது அணி என்றே அவர் நம்புகின்றார் என்பது பொதுவான அபிப்பிராயமாகும்
இத்தகைய நிலைமைகளிலேயே மூன்றாவது அணிக்கான முயற்சிகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.