பாலசந்தருடன் நீண்ட நாள்களுக்கு இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் மோகன் மற்றும் அவரது கடைசி உதவி இயக்குநர் சமுத்திரக்கனி இணைந்து நடத்திய ‘கே.பி 90′ நிகழ்ச்சி, சாலிகிராமத்தில் நடைபெற்றது.
இயக்குநர் கே.பாலசந்தரின் பிறந்தநாள் என்றாலே கோடம்பாக்கம் களைகட்டிவிடும். அவர் நினைவைப் போற்றும் நிகழ்ச்சிகள், அவர் இயக்கிய படங்களின் திரையிடல்கள், அவர் படங்கள்குறித்த விவாதங்கள், சமூக வலைதளங்களில் பதிவுகள் என ஒருநாள் முழுக்க பாலசந்தர் குறித்த பதிவுகள், நிகழ்வுகள்தாம்.
அந்த வரிசையில், பாலசந்தருடன் நீண்ட நாள்களுக்கு இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் மோகன் மற்றும் அவரது கடைசி உதவி இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடத்திய ‘கே.பி 90′ நிகழ்ச்சி, சாலிகிராமத்தில் நடைபெற்றது.
பாலசந்தரின் உதவியாளர்கள், அவர் இயக்கிய படங்கள், தயாரித்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், “எனக்கு ஒரு பெரிய பெருமை இருக்கு. அதை நான் கர்வத்தோட சொல்லல.
ஆனா, பாலசந்தர் சாருக்கு அவர் இயக்கியதில் பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான்தான் ஹீரோ. இதைவிட ஒரு பெருமை வேண்டுமாஸ” என்றார். மேலும், ‘அரங்கேற்றம்’, ‘அக்னி சாட்சி’, ‘சிந்து பைரவி’ என அந்த மூன்று படங்களையும் அவற்றின் படப்பிடிப்புகளில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவு முறிவை சுட்டிக்காட்டிப் பேசினார்.
“ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம், நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும், ஆளுமையும் பெரியது.
அவரை வெல்ல, அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினேன்.
என் தமிழுக்கு ஏற்ற மெட்டை அமைக்கும் ஒருவர்கூட கிடைக்கவில்லை” எனத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், “அந்த நிலையில் ஒருநாள், பாலசந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு புதிய இசையமைப்பாளரின் பாடல்களுக்கு வரிகள் எழுத வேண்டும் என்றார்கள்.
நானும் ஒப்புக்கொண்டு அங்கு சென்றேன். போய்ப் பார்த்தால், கீ-போர்டு முன்னால் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். ‘ஏ திலீப்பு, மியூசிக் டைரக்டர் ஆகிட்டியா’ என்றேன்.
அவர்தான் ஏ.ஆர். ரஹ்மான். ‘ரோஜா’ உள்பட, அந்த ஆண்டு பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த மூன்று படங்களிலும் பாடலாசிரியர் நான்தான்.
மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட், படங்களும் பெரும் வெற்றி. அப்படிப்பட்ட ரஹ்மான் – வைரமுத்து வெற்றிக் கூட்டணியை உருவாக்கியவர் இந்த பாலசந்தர்” என்றார்.
இறுதியாக, “இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என இத்தனை சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், யாரும் பாலசந்தர் போன்ற பல பெரிய இயக்குநர்களின் வாழ்க்கையையோ, பணிகளையோ குறித்து எந்தப் பதிவும் செய்யவில்லை.
பாலசந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலசந்தர் மட்டுமல்ல, பல சாதனையாளர்களின் சரித்திரங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
அது, பாலசந்தரில் இருந்து தொடங்க வேண்டும். அந்த ஆவணக் காப்பகத்தை இந்த சங்கங்கள் பராமரிக்க வேண்டும்.” என்ற கோரிக்கையோடு விடைபெற்றார், வைரமுத்து.
இந்நிகழ்ச்சியில், கலைப்புலி எஸ்.தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குநர் சுரேஷ் , எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், படவா கோபி எனப் பலர், தங்களுக்கும் பாலசந்தருக்குமான உறவு குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
மணிரத்னம் போடும் `கே.பி’ சுழி, அடுத்த ரஜினி, தாடியில்லா திருவள்ளுவர்ஸ கே.பி. பிறந்தநாள் நிகழ்ச்சி ஹைலைட்ஸ்!