ஸ்ரீதேவி மரணம் விபத்தல்ல கொலை; டிஜிபி-யின் தகவலால் அதிர்வலை!
10 Jul,2019
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியிருப்பது இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங், மலையாள நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கேரளாவின் புகழ்பெற்ற முன்னாள் தடயவியல்துறை நிபுணரான டாக்டர் உமாடாதன் (Umadathan) அண்மையில் உயிரிழந்தார். புகழ்பெற்று விளங்கிய தடயவியல் துறை நிபுணர் உமாடாதன், தன்னிடம் ஸ்ரீதேவி மரணம் பற்றி பேசியதை மேற்கோள்காட்டி, டிஜிபி ரிஷிராஜ் சிங், மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரைத் தீட்டியுள்ளார்.
அதில், அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஸ்ரீதேவி, குளியலறையில், பாத் டாப்பில் மூழ்கி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டதாகவும், அவ்வாறு மூழ்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என உமாடாதன் தன்னிடம் கூறியதாகவும், டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.
வெறும் ஒரு அடி தண்ணீர் மட்டுமே அந்த பாத் டாப்பில் இருந்ததால், வேறு ஒருவர், ஸ்ரீதேவியின் தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என தடயவியல் நிபுணர் உமாடாதன் சுட்டிக்காட்டியதாகவும், கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் குறிப்பிட்டிருக்கின்றார்.
டிஜிபி ரிஷிராஜ் சிங்கின் இந்த கட்டுரையால் இந்தியாவில் ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் மீளவும் சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.