கடத்தல் வழக்கில் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல போலீஸார் திட்டம்
04 Jul,2019
தெலங்கானாவில் தனது மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து அவரை விசாரிக்க தெலுங்கானா போலீசார் சென்னை வந்தனர்.
நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமாருக்கும், ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2012-ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்தாகி விட்டது.
இவர்களது விவாகரத்துக்கு பின் மகள், தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற மகளை கடத்தி சென்று விட்டதாக தெலங்கானா போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார்.
இதையடுத்து, வனிதா விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
தற்போது வனிதா விஜயகுமார் தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருப்பதை அறிந்த ஆனந்தராஜ், கடத்தப்பட்ட மகளை மீட்டு அழைத்து செல்ல தெலங்கானா போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் சென்னை வந்தார்.
நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த ஆனந்தராஜ் புகார் குறித்து தெரிவித்தார்.
அங்கு சென்று வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்யவும், அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை கைது செய்து விசாரிக்கவும் நசரத்பேட்டை போலீசாரின் உதவியை கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.