மழைதான் சென்னையை காப்பாற்ற வேண்டும்- டைட்டானிக் ஹீரோவின் சென்னை பாசம்
26 Jun,2019
சென்னையில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் “இனிமேல் மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்” என பதிவிட்டுள்ளார் ஹாலிவுட் நடிகரான லியானார்டோ டி-காப்ரியோ.
கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டையே வாட்டி வருகிறது. அதிலும் சென்னையின் நிலைமை ரொம்ப மோசம். நாளுக்கு நாள் மக்கள் வீதிகளில் தண்ணீருக்காக சண்டை போடுவது வலுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளே செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பலர் பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க அலைய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து பதிவிட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகட் லியார்னார்டோ டி-காப்ரியோ. டைட்டானிக் படத்தின் ”ஜாக்” என்னும் கதாப்பாத்திரம் மூலமாக பிரபலம் ஆன இவர் “வுல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரீட்”, “ரெவனெண்ட்” போன்ற திரைப்படங்களில் நடித்து ஆஸ்கர் வென்று உலக புகழ் பெற்றவர். ஐ.நா சபையின் சுற்றுசூழல் பாதுகாப்புக்கான தூதராக செயல்பட்டு வருகிறார் டி-காப்ரியோ.
இவர் சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து “சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும். நகரின் அனைத்து நீர் தேக்கங்களும் வறண்டு விட்டன. தெற்கு இந்தியாவின் முக்கிய நகரமான சென்னை தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. நகரின் முக்கியமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன. விடுதிகளும், உணவகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் நீர் ஆதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளை தேடி வருகின்றனர். மக்கள் மழை வேண்டி கடவுளை பிரார்த்திக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தாம்பரம் அருகே கிணற்றில் மக்கள் நீர் எடுக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் சிலர் “உங்களுக்கு தெரியுது எங்க ஊர் அதிகாரிகளுக்கு தெரிய மாட்டேங்குதே” என பதிவிட்டுள்ளனர்.