தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியும் ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழ்த் திரையுலக நடிகர்களின் சங்கமான தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவருகிறது. காலை ஏழு மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறுமெனக் கூறப்பட்ட நிலையில், சற்றுத் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இதற்கு முந்தைய தேர்தல் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. முன்பு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டட வேலைகள் நடந்துவருவதால் அதே நிர்வாகிகள் அடுத்த ஆறு மாதத்திற்குத் தொடர்வார்கள் என முடிவெடுக்கப்பட்டது. இதனால் தேர்தல் ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவிவந்த நிலையில், நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டப்பட்டு புதிய நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதற்கான தேர்தலை நடத்துவது என்றும் இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மனாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தத் தேர்தல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் ஜூன் 23ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை ஐந்து மணிவரை நடைபெறுமென முடிவுசெய்யப்பட்டது.
ஏற்கனவே பதவியில் இருந்த பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு இந்த அணியின் சார்பில் பூச்சி முருகனும் நடிகர் கருணாசும் போட்டியிடுகின்றனர்.
இந்த அணியை எதிர்த்து, நடிகரும் இயக்குனருமான கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். இந்த அணியில் தலைவர் பதவிக்கு கே. பாக்யராஜும் பொதுச் செயலார் பதவிக்கு ஐசரி கணேஷும் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதாக இருந்த எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரிக்கு அருகில் நீதிபதிகள், அமைச்சர்கள் ஆகியோரது வீடுகள் இருப்பதாலும் தேர்தல் தினத்தன்று எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்பதாலும் இரு அணியினருக்கு இடையில் பகைமை இருப்பதாலும் மோதல் ஏற்படக்கூடுமென பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையின் அனுமதியைப் பெறும்படி கல்லூரி நிர்வாகம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தலை நடத்த தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு உத்திரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என்றும் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட பிற இடங்களைப் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகக் கூறி , இதன் காரணமாக நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைப்பதாக மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தடைசெய்யும்படி கோரி, நடிகர் விஷால் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பதிவாளர் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்ததோடு, திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் எனவும் ஜூன் 21ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், பதிவான வாக்குகளை மறு உத்தரவு வரும்வரை எண்ணி, முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்று கூறினார்.
இதற்கிடையில் தேர்தலை நடத்துவதற்கான இடம் தொடர்பாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நிலுவையில் உள்ள வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டுமென சனிக்கிழமையன்று விஷால் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை தன்னுடைய வீட்டில் ஆனந்த வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாநிலம் முழுவதும் குடிநீருக்கான போராட்டங்கள் நடந்துவருவதால் அவற்றை எதிர்கொள்ள காவல்துறையினர் தேவைப்படுவதாகவும் நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு தருவதில் சிரமம் இருப்பதாகவும் வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தலை நடத்த உத்தரவிடும்படி கோரினார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என்றும் இதற்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டுமென்றும் மாலை ஆறு மணிக்கு மேல் பள்ளிக்கூடத்தைக் காலிசெய்துவிட வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார். தேர்தலை நடத்தும் அதிகாரியான பத்மனாபனுக்கு தேர்தலுக்குப் பிறகும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.
இந்தத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு ஏற்படும் செலவு மொத்தத்தையும் தென்னிந்திய நடிகர் சங்கமே ஏற்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, ஞாயிற்றுக் கிழமையன்று காலையில் தேர்தல் துவங்கியது. தேர்தல் நடைபெறும் புனித அப்பாஸ் பள்ளிக்கூடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வாக்களிப்பவர்கள், பத்திரிகையாளர்கள் தவிர வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நடிகர் சங்கத் தேர்தலில் பிரச்சனைகள் என்னென்ன?
2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நடிகர் சரத் குமார் தலைமையில் ஒரு அணியும் நடிகர் நாசர் தலமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கும், ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். நாசர் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும் விஷால் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். நாசர் தலைமையிலான அணி பாண்டவர் அணி என அழைக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்றது. நடிகர் சங்கத்திற்குப் புதிய கட்டடத்தைக் கட்டுவது, உறுப்பினர்களின் பட்டியலை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை அந்தத் தருணத்தில் நாசர் அணியினர் வாக்குறுதியாக வழங்கினர்.
நாசர் அணி வெற்றிபெற்ற பிறகு, முந்தைய சரத்குமார் தலைமையிலான நிர்வாகிகள் கட்டடம் கட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது. புதிதாக கட்டடம் கட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, திரைப்படம் தயாரிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்த நடிகர் நந்தா - ரமணா நடத்திவரும் எவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த கலைநிகழ்ச்சிகளை நடத்துவதில் தங்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லையென விஷால் அணியைச் சேர்ந்த சிலர் அதிருப்தி அடைந்தனர். இருந்தபோதும் இந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்க அளவில் நடிகர் சங்கக் கட்டடத்திற்கான நிதி திரட்டப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, விஷால் அணியில் இடம்பெற்றிருந்த நடிகை சங்கீதா, நடிகர் உதயா, குட்டி பத்மினி ஆகியோர் அவரது அணியைவிட்டு விலகினர்.
நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்கான திரைப்படம்
நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்கென விஷால், கார்த்தி ஆகியோர் நடிக்க சுபாஷ் கதையில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குவார் எனவும் முடிவுசெய்யப்பட்டது. கறுப்பு ராஜா வெள்ளை ராஜா எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பார் எனவும் இந்தப் படத்திற்காக வாங்கும் சம்பளம் அனைத்தையும் நடிகர் சங்கத்திற்குத் தந்துவிடுவதாக விஷாலும் கார்த்தியும் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் கதாசிரியர் சுபாஷ் திடீரென உயிரிழந்தார். இருந்தபோதும் கார்த்தியை வைத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், தங்களிடம் கூறியபடி படம் எடுக்கப்பட்டவில்லையெனத் தெரிவித்த கார்த்தியும் விஷாலும் படத்திலிருந்து விலகினர். இதனால், சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக அந்தப் படத்தைத் தயாரித்த ஐசரி கணேஷ் அதிருப்தியடைந்தார்.
இந்த நிலையில்தான், விஷால் அணியிலிருந்து அதிருப்தி காரணமாக விலகிய சங்கீதா, குட்டி பத்மினி, உதயா, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் புதிய அணியை உருவாக்க ஆரம்பித்தனர். இவர்களுக்கு ஐசரி கணேஷ் ஆதரவளித்தார். இந்தத் தரப்பிற்கு ஆளும் அ.தி.மு.கவின் ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, அ.தி.மு.க. ஆதரவாளரான கே. பாக்யராஜை முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்க இந்த அணி முடிவுசெய்தது.
நடிகர் சங்க உறுப்பினர்கள் விவகாரம்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த முறை தேர்தல் நடைபெற்றபோது, 3139 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டவுடன் உறுப்பினர்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக, ஒருவர் குறைந்தது 8 முதல் 10 நிமிடங்கள் ஒரு திரைப்படத்தில் தோன்றியிருக்க வேண்டும். அல்லது மேடை நாடகக் கலைஞர்களாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு கட்டத்தில் தங்களுக்கு வாக்குகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக முந்தைய நிர்வாகிகள், யார் யாரையோ உறுப்பினர்களாகச் சேர்த்ததாக விஷால் தரப்பினர் குற்றம்சாட்டினர். சுமார் 60 பேர் அப்படிச் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து உறுப்பினர் பட்டியலைச் சரிசெய்ய அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதில் பதில் அனுப்பாத 44 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு நீக்கப்பட்டது.
இந்த உறுப்பினர்கள் மாவட்ட சங்கங்களில் பதிவாளரை அணுகி தாங்கள் நீக்கப்பட்டதாக முறையிட்டதைத் தொடர்ந்தே, தேர்தல் நடத்த பதிவாளர் தடைவிதித்தார். ஆனால், 44 உறுப்பினர்களே இவ்வாறு தெரிவித்திருப்பதால், தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாரம்பரியம்மிக்க தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் சென்னையிலேயே எடுக்கப்பட்டன. அந்த நிலையில், திரைக்கலைஞர்களின் குரலை பிரதிநிதித்துவம் செய்வதற்காக இயக்குனர் கே. சுப்பிரமணியம் முயற்சியில் 1952ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்டது. நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இதற்கான நிதிஉதவிகளைச் செய்தார்.
முதல் தலைவராக டி.வி. சுந்தரமும் துணைத் தலைவர்களாக எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.டி. சுப்புலட்சுமி, எஸ்.டி. சுந்தரம், கே. வேம்பு ஆகியோரும் செயல்பட்டனர். 1955ல் நடிகன் குரல் என்ற பத்திரிகையும் துவங்கப்பட்டது. 1980களில் நலிந்த கலைஞர்களுக்கு உதவிசெய்ய நடிகர் சங்க அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டது.
இந்த சங்கத்தின் தலைவர்களாக, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி. ராமச்சந்திரன், அஞ்சலி தேவி, சிவாஜி கணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் செயல்பட்டிருக்கின்றனர்.