நடிகை நிலானிக்கு பாலியல் தொல்லை!
21 Jun,2019
சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானிக்கு திருமண ஆசை காட்டி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பவர் நடிகை நிலானி. இவருக்கும் சின்னத்திரை உதவி இயக்குனரான காந்திக்கும் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் காந்தி திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம் என்று பரபரப்பான தகவல் வெளியானது.
இதனால் மனமுடைந்த நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் நடிகை நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பாலியல் ரீதியாக தனக்கு தொல்லை வருவதாக குறிப்பிட்டுள்ளார். நிலானி தனது புகாரில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஆண்டு என்னை பற்றி பரபரப்பான செய்திகள் வெளியான நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். தனக்கு திருமணம் ஆக வில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். இதன் பின்னர் அடிக்கடி போனில் பேசினோம். நேரிலும் சந்தித்தோம். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இதனால் நான் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதன் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று மிரட்டுகிறார்.
நான் சொல்வது போல் கேட்காவிட்டால் உனது ஆபாச படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுவரை 10 ஆயிரம் செல்போன்களில் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசும் போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே போலீசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிலானியின் காதல் விவகாரம் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் உதவி கமிஷனர் சீருடையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசி அவர் வெளியிட்ட வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் குன்னூரில் பதுங்கி இருந்த நிலானியை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.