எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியில்லை" -
18 Jun,2019
சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையிலான பஞ்ச பாண்டவர் அணியை எதிர்த்து நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி களம் இறங்கியுள்ளது.
அமைச்சர்கள் குடியிருப்பு மற்றும் நீதிபதி குடியிருப்புகள் உள்ளதால் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத்தேர்தல் நடைபெறுவதை தவிர்க்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பை வழங்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் நடிகர் விஷால் கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத்தேர்தலை நடத்த அனுமதியில்லை. நடிகர் சங்கத்தேர்தலை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை விட நடிகர் சங்கத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
வெகுதொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தை நாளை தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.