திரைப்பட பின்னணி பாடகி, பி.சுசீலா, பாட வந்து, 65 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு, 'தினமலர்' இணையதளம், சுசீலாவை கவுரவிக்கும் விதத்தில், அவரைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொல்லும் இணைய பக்கத்தை வெளியிட்டுள்ளது.
எட்டு வயதிலேயே, இசை பயில ஆரம்பித்தார். 14 வயதில், கர்நாடக இசை கச்சேரி அரங்கேற்றம் செய்தார். தன், 18வது வயதில், சென்னை வந்து, வானொலியில், 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில், பாடியவரை, இசையமைப்பாளர், பெண்டியாலா நாகேஸ்வர ராவ் என்பவர் தான், சினிமாவிற்கு அறிமுகம் செய்தார்.
இன்று, 84 வயதாகும் இவர், தன் முதல் பாடலை, 1953ல் சினிமாவில் பாடினார். கடைசியாக, சினிமாவிற்கு பாடியது, 2008ல். அதாவது, 55 ஆண்டுகள், தொடர்ந்து பாடி வந்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளில், பல்லாயிரம் பாடல்கள் பாடியிருந்தாலும், திருவருட்செல்வர் திரைப்படத்தில் வரும், 'மன்னவன் வந்தானடி...' பாடல் தான், இவருக்கு பிடித்தது.
நாகேஸ்வரராவ், கண்டசாலா, விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்று, அன்றைய இசை ஜாம்பவான்கள் துவங்கி, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என, மேலும், பலரது இசையமைப்பிலும் பாடியுள்ளார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம் மற்றும் சிங்களம் என, பல மொழிகளில் மொத்தம், 40 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
பின்னணி பாடகர், டி.எம்.சவுந்தர்ராஜனோடு மட்டும் இணைந்து, 700க்கும் அதிகமான, 'டூயட்' பாடல்களை பாடியுள்ளார், சுசீலா.
தனியாக, 17 ஆயிரத்து, 695 பாடல்கள் பாடியுள்ள, ஒரே பின்னணி பாடகி, இவர் தான். இச்சாதனை, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இது தவிர, 6,000 பக்தி பாடல்களும் பாடியுள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற, 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலுக்காக, பின்னணி பாடகருக்கான, முதல் தேசிய விருதை பெற்றவர். அதன் பின், ஐந்து முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 'பத்மபூஷண்' விருதும் பெற்றுள்ளார். மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என, அந்தந்த மாநிலத்தின் உயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போது, 'பி.சுசீலா டிரஸ்ட்' என்ற பெயரில், நலிந்த இசை கலைஞர்களுக்கு, மாத ஊதியம் வழங்குவது, ஆண்டுதோறும் விழா நடத்தி, முக்கிய கலைஞர்களை கவுரவிப்பது, உடல் நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு, மருத்துவ உதவி வழங்குவது ஆகியவற்றை, செய்து வருகிறார்.