கொலைகாரன்: பார்வை
11 Jun,2019
ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் காவல் துணை ஆணையர், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போராடினால் அதுவே 'கொலைகாரன்'.
கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு நாளும் எதிர் வீட்டுப் பெண் ஆஷிமா நார்வல் வேலைக்குக் கிளம்பும்போதே அவரும் வெளியே கிளம்பிச் செல்கிறார். இந்நிலையில் ஒருநாள் ஆஷிமாவைச் சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார்.
காவல் துணை ஆணையர் அர்ஜுன் இந்த வழக்கை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. குற்றம் நடந்தது என்ன? கொலையாளி யார்? இந்த வழக்குக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது திரைக்கதை.
'லீலை' படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் ஏழு வருடங்கள் கழித்து 'கொலைகாரன் 'படத்தை இயக்கியுள்ளார். ‘The Devotion of Suspect X’ என்ற ஜப்பானிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் ஒரு கொலை வழக்கு, அதில் உள்ள திருப்பங்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது.
பிரிக்கவே முடியாத இரண்டு எது என்று கேட்டால் விஜய் ஆண்டனியும் உளவியலும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர்ந்து உளவியல் சம்பந்தப்பட்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அவர் இதிலும் சில சாயல்களை வெளிப்படுத்தியுள்ளார். இறுக்கமான முகமும் அழுத்தமான பதிலுமாக பிரபாகர் கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி சரியாகப் பொருந்துகிறார். அவரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் ரசிக்க வைக்கின்றன. ரொமான்ஸ் மட்டும்தான் அவருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்ணின் உணர்வுகளை ஆஷிமா நார்வல் சரியாகப் பிரதிபலிக்கிறார். பயத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தும் விதம் நல்ல நடிப்புக்கான சான்று.
சீதா, நாசர், பகவதி பெருமாள் ஆகியோர் கதையோட்டத்துக்குப் பெரிதும் துணை புரிகிறார்கள். வழக்கைப் புலனாய்வு செய்யும் துணை ஆணையர் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார். பல காட்சிகளில் ஹீரோவை விட அதிகம் ஸ்கோர் செய்து கெத்து காட்டுகிறார்.
முகேஷின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் வேகத்தடைகள். பின்னணி இசையில் கதைக்களத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் சைமன். கதை தொடங்கும் முன்பே பாடல் தொடங்குவது சோர்வை வரவழைக்கிறது. அதை ரிச்சர்ட் கெவின் இயக்குநரின் ஆலோசனையுடன் கத்தரித்திருக்கலாம்.
எந்த இடைச்செருகலும் இல்லாமல் வழக்கின் திசை ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால் பாடல் காட்சிகளைத் தவிர, தேவையற்ற காட்சிகள் என்று எதுவும் இல்லாத அளவுக்கு நறுக் என்று உள்ளன. எதிர்பார்க்காத சில சுவாரஸ்ய முடிச்சுகள் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன. அந்த முடிச்சுகளில் ஒன்று ஏற்புடையது. இன்னொன்று நம்பகத்தன்மை இல்லாமல், சினிமாத்தனத்துடன் செயற்கையாக உள்ளது. ஏன் விஜய் ஆண்டனி முன்பு பார்த்த வேலையை விட்டார் என்ற கேள்விக்குப் படத்தில் பதில் இல்லை. இந்த இரண்டு விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் 'கொலைகாரன்' குறிப்பிட வேண்டிய தரமான படம்.