என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்
08 Jun,2019
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாசர் அணிக்கு எதிராக புதிய அணி ஒன்றை நேற்று அறிவித்துள்ளார்கள். ஐசரி கணேஷ் உருவாக்கியுள்ள இந்த அணியில் அவருடன், பாக்யராஜ், குட்டி பத்மினி, உதயா, பரத், ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்டவர்கள் போட்டியிட உள்ளார்கள். ஐசரி கணேஷ் தலைமையிலான அணிக்கு ஆளும் கட்சி ஆதரவும், முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆதரவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்று இந்த அணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நடிகர் சங்கத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்கும் என்று திரையுலகில் இப்போதே பேச்சு எழத்தொடங்கி யுள்ளது.