அதிக சம்பளம் கேட்ட – ஜி.வி.பிரகாஷ்
25 May,2019
சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அதிக சம்பளம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
சினிமாவில் பிசியாக இருந்துகொண்டே சமூக செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் அளித்த பேட்டி:-
மீண்டும் இசை பக்கமும் கவனம் செலுத்துகிறீர்களே?
சூர்யா நடிப்பில் சூரரை போற்று, தனுஷ் நடிப்பில் அசுரன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படங்களுக்கு இசை அமைக்கிறேன்.
சமூக பணிகளில் அடுத்து?
வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன்.
மகத்தான மனிதர்கள் என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். இதை டிவியில் செய்தால் அது வியாபார நோக்கமாகி விடும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.
நீங்கள் பேட்டி காண இருக்கும் முதல் மனிதர் யார்?
ஜவ்வாது மலையில் ஆசிரியையாக இருக்கும் மகாலட்சுமி என்பவர். குக்கிராமங்களில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்வி பயில வைத்துள்ளார். அவரை பேட்டி எடுத்ததே மகத்தான அனுபவம். எனது சமூக செயற்பாட்டு குழுவில் இருக்கும் குணா இயக்கி உள்ளார்.
சினிமாவில் பிசியாக இருக்கும்போது இது சிரமம் இல்லையா?
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தான் இதற்காக பணிபுரிய போகிறோம். இதுவரையில் இப்படித்தான் நேரம் ஒதுக்கி செயல்பட்டு வருகிறேன். இப்போதைக்கு மாதம் ஒன்று என தொடங்குகிறோம். போகப்போக அதிகப்படுத்தும் திட்டம் உள்ளது.
அதிக சம்பளம் கேட்டதாக செய்தி வந்ததே?
நான் இசையமைத்த, நடித்த கம்பெனிகளுடன் தொடர்ந்து பணிபுரிந்துள்ளேன். பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்து இருந்தால் இந்த அளவுக்கு பணிபுரிந்து இருக்க முடியாது.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?
தெரியவில்லை. அரசியலில் ஒரு பகுதியாகவே இருக்கிறேன். கட்சி அரசியலுக்குள் நுழைவதில் ஆர்வம் இப்போது இல்லை.