மான்ஸ்டர் - விமர்சனம் - விமர்சனம்
20 May,2019
பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட
பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் எல்.எல்.பி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்‘. மின்சார வாரியத்தில் வேலை செய்யும் அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ்.ஜே.சூர்யா). அமைதியான எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத பேர்வழி. நீண்ட நாட்களாக திருமணத்திற்கு பெண் தேடி வரும் சென்னை வாழ் பேச்சிலர். ஒரு பெண்ணும் செட்டாகாத விரக்தி. சொந்த வீடு இருந்தால் ஒரு வேளை திருமணம் கைகூடும் என நண்பர் ரவி (கருணாகரன்) ஆலோசனைக் கொடுக்க வீடு தேடுகிறார். அவருக்கு ஏற்றார் போல் ஒரு வீடும் கிடைக்கிறது. அருமையான வீடு கைக்கு வர திருமணமும் கைகூடுகிறது. சந்தோஷமாக ரசித்து ரசித்து வீட்டை அழகுபடுத்தும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வில் ஒரு சின்ன எலி விளையாடத் துவங்குகிறது. இதற்கிடையில் ஏதோ ஒரு பெண் கிடைத்தால் போதும் என நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மேகலா (பிரியா பவானி ஷங்கர்) கிடைத்ததில் அத்தனை பூரிப்பு.
சொந்த வீடு, கல்யாணம், அழகான பெண் என எல்லாம் இருந்தும் எதையுமே அனுபவிக்க முடியாதபடி எலியின் ஆட்டம். முடிவு என்ன எலி என்ன ஆனது என்பது ரகளையான அதே சமயம் எமோஷனல் கிளைமாக்ஸ். இந்த மனுஷனுக்கு வசனமே வேண்டாம், ரியாக்ஷன், எக்ஸ்பிரஷன்களிலேயே மொத்த வசனமும், மைண்ட் வாய்ஸும் அவ்ளோ அருமையா எடுத்து வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. எலியை காலி செய்ய அவர் எடுக்கும் யுக்திகள், சந்திக்கும் பிரச்னைகள் என ஒவ்வொருவருக்கும் தங்கள் வீட்டு எலியின் சேட்டைகள் நிச்சயம் ஞாபகம் வரும். பிரியா பவானி ஷங்கர் கொஞ்சம் கொஞ்சமாக அழகிய தமிழ் நாட்டு மருமகளாக இளைஞர்கள் நெஞ்சில் குடியேறிக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்திலும் அவர் வரும் காட்சிகளும், பாடல்களும் தென்றல் ரகம்தான்.
கருணாகரன் காமெடியனாக இல்லாமல் குணச்சித்திர பாத்திரத்தில் தனக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். எனினும் இன்னும் முயற்சித்திருக்கலாம். கல்யாணம், பெண் பார்க்கும் படலம் எனில் ஒரு கைப் பார்ப்பார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் என்பதில் முந்தைய படம் போல் இந்தப் படமும் சலைத்தபாடில்லை. ஆனால் இந்தப்படம் முற்றிலும் வேறு கதைக்களம், வித்யாசமான முயற்சி என யோசித்ததற்கு பாராட்டுகள். எனினும் ‘ஈ‘ படத்தில் சுதீப் படும் அவஸ்தைகளும், அதை ஒழிக்க அவர் எடுக்கும் பிரயர்த்தனங்களும் தான் இப்போது வரை அந்தப்படத்திற்கு பக்கபலமாக நிற்கிறது. அந்த மேஜிக் இங்கே சின்ன மிஸ்ஸிங். ஒருவேளை உண்மையான எலியைக் கொண்டே காட்சிகள் அமைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஈக்களை விட மோசமான பிரச்னைகள் கொண்டு வருபவை எலிகள் அதை டார்கெட் செய்து இன்னும் நிறைய எஸ்.ஜே.சூர்யா மேஜிக்கல் ரியாக்ஷன்களை கொடுத்திருக்கலாம்.
ஆனால் ஒரு உண்மையான எலியைக் கொண்டு கிராபிக்ஸ்களை நிராகரித்து இவ்வளவு அருமையான காட்சிகள் அமைத்ததற்கே அப்ளாஷ். ஆங்கிலப் படங்கள் பார்க்கும் நபர்களுக்கு ‘மௌஸ் ஹன்ட்‘ படம் சட்டென வந்து போகலாம். ஆனால் இந்தப்படம் எதார்த்தம் எங்கும் சரியக்கூடாது என்பதில் கையாளப்பட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘தீரா காதல்‘, மற்றும் ‘என்னைத் தேடி‘ பாடல்கள் காதுகளுக்கு இனிமை. குட்டீஸ் வரும் ‘ஓட முடியாது‘ பாடல் கியூட் ரகம். எலி ரகளைக் காட்சிகளில் பின்னணி அருமை. படம் பெரும்பாலும் ஒரு அறை, அதற்குள் நடக்கும் கதை என பயணிப்பதை எங்கும் சரியாமல், போராடிக்காமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய். மொத்தத்தில் படம் தேவையில்லா கிராபிஸ்களை புகுத்தாமல், உயிர்களுக்கு தீங்கு செய்யாதே என குழந்தைகளுக்கு பாடம் எடுத்திருக்கிறது. கோடைவிடுமுறை குடும்பத்தோடு போக ஒரு படமும் இல்லையா என்றால் இதோ டிக்கெட்டைப் போடுங்க ‘மான்ஸ்டர்‘ படத்துக்கு என தைரியமாக சொல்லலாம்.