பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் திருத்தம்
27 Apr,2019
சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது என்கிறது தி இந்து தமிழ் செய்தி.
தமிழகத்தில் பிளாஸ்டிக் கைப்பைகள், உறிஞ்சு குழல்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் அறிவுப்புக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த தடை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த அரசு, தடையை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தி வரும் உள்ளாட்சி அமைப்புகளும், உணவு பாதுகாப்புத் துறையினரும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தடையை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என தெரிவிக்கிறது தி இந்து தமிழ் செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: வைப்பு நிதியாக 10 ரூபாய் நாணயங்களை கொண்டு 10,000 ரூபாய் தொகையை செலுத்திய வேட்பாளர்
சூலூரில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு நேற்று 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வைப்பு நிதியாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு பத்தாயிரம் ரூபாய் தொகையை செலுத்தியதாக தெரிவிக்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
மக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதை மாற்றவே தான் இவ்வாறு செய்ததாக கருத்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் தெரிவித்தார்.
அந்த தொகை பெரும்பாலும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது என்றும், அந்த தொகுதியை சேர்ந்த ஒவ்வொரிடமும் சென்று ஒரு ரூபாய் கேட்டதாகவும், சூலூரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பேர் இந்த தொகையை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார் என்கிறது அச்செய்தி