காஞ்சனா - 3: சினிமா விமர்சனம்
21 Apr,2019
திரைப்படம்
காஞ்சனா - 3
நடிகர்கள்
ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி, கோவை சரளா, தேவதர்ஷிணி, தமன், தில்லி கணேஷ், சூரி
இயக்குனர்
ராகவா லாரன்ஸ்
பின்னணி இசை
தமன்
2007ஆம் ஆண்டில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற முனி படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவரும் நான்காவது பேய்ப் படம் இது. காஞ்சனா பட வரிசையில் இது மூன்றாவது.
காஞ்சனா பட வரிசைப் படங்களுக்கே உரிய அதே கதைதான். பேயைக் கண்டால் பயப்படும் ராகவன், தனது தாய், அண்ணன், அண்ணி, அவர்கள் குழந்தையுடன் தனது தாத்தாவின் வீட்டிற்குப் போகிறார். போகும் வழியில் ஒரு மரத்தில் பேயை பிடித்து அறைந்து வைத்திருந்த ஆணியை தெரியாத்தனமாக பிடுங்கி எடுத்துச் செல்ல, பேய் அவர்களுடனேயே தாத்தா வீட்டிற்கு வந்துவிடுகிறது. அந்தப் பேய் ராகவனுக்குள் இறங்கிவிடுகிறது.
அந்தப் பேயின் பின்னணி என்ன, எதற்காக இப்படி அலைகிறது, ராகவன் என்ன ஆனான் என்பது மீதிக் கதை.
படம் துவக்கத்திலிருந்தே தடுமாற்றமாகத்தான் இருக்கிறது. யாரோ இரண்டு காவலர்களை ரவுடிகள் கொல்கிறார்கள். அந்த ரவுடிகளை வேறொரு இடத்திற்கு வரவைத்து ராகவா லாரன்ஸ் கொல்கிறார். யார் அந்த காவலர்கள், ரவுடிகளை ஏன் வேறொரு இடத்திற்கு வரவைத்துக் கொல்ல வேண்டும்; கொல்ல வேண்டுமென முடிவுசெய்துவிட்டால் அங்கேயே கொல்ல வேண்டியதுதானே என்ற குழப்பம் தீர்வதற்குள், மற்றொரு ராகவா லாரன்ஸின் கதைக்குள் புகுகிறது படம்.
முந்தைய காஞ்சனா படத்தில் பார்த்த அதே காட்சிகள் முன்பைவிட நீளமாக வருகின்றன. மூன்று மாமன் மகள்கள் இருக்கும் வீட்டிற்கு வரும் லாரன்ஸ், நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் எனச் செல்கிறார். உடனே அவருக்கு அவரே பில்ட்-அப் கொடுக்கும் வகையில் ஒரு பாட்டு. பிறகு மூன்று மாமன் மகள்களுடன் மற்றொரு பாட்டு. இந்த களேபரத்தில் பேயை மறந்துவிட்டார்களோ என்று யோசிக்கும்போது, சாவகாசமாக இடைவேளையில் வருகிறது பேய்.
அதற்குப் பிறகும் பெரிய சுவாரஸ்யமில்லை. முனீஸ்வரன் கோவிலில் அகோரிகள், ரஷ்ய நாட்டு பேயோட்டிகள், நீண்ட ஃப்ளாஷ்பேக், சுடுகாடா - கோவிலா என்று தெரியாத இடத்தில் பேயோட்டிக்கும் பேயிக்கும் சண்டை என முடிகிறது படம்.
முனி - காஞ்சனா வரிசை படங்கள் எல்லாமே ரசிகர்களை முழுக்க முழுக்க திகிலில் ஆழ்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்படுபவை அல்ல. நகைச்சுவையும் திகிலும்கூடிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்குவதே இந்தப் படங்களின் நோக்கம். ஆனால், இந்தப் படத்தில் திகிலும் இல்லை. சொல்லத்தக்க வகையில் நகைச்சுவையும் இல்லை.
ஒரு பெரிய வீட்டில் வசிக்கும் ஒருவர் அல்லது இருவர் பேயைப் பார்த்துவிட்டால் போதாதா? உடனே அங்கிருந்து கிளம்ப மாட்டார்களா? இந்தப் படத்தில் தினமும் ஒருவர் பேயைப் பார்த்துப் பயப்படுகிறார். பிறகு காமெடி என்ற பெயரில் ஏதோ பேசிவிட்டு எதுவுமே நடக்காததைப்போல தூங்கப் போய்விடுகிறார்கள். பிறகு அடுத்த நாள் இரவில் இன்னொருவர் பேயைப் பார்க்கிறார். பிறகு, மீண்டும் அதேபோல மொக்கைக் காமெடி; பிறகு தூக்கம்.
கதாநாயகனுக்குள் பேய் புகுந்தது தெரிந்தவுடன், அந்தப் பேய் இருப்பதற்கான நியாயங்களை ஒருவர் சொல்கிறார். பிறகு வீட்டில் உள்ள எல்லோருமே அந்த நியாயத்தைப் புரிந்துகொண்டு, அந்தப் பேயை கதாநாயகனிடமே இருக்கும்படி விட்டுவிடுகிறார்களாம். உருகிஉருகி பேசுகிறார்களாம்.
படத்தில் சூரி இருக்கிறார். ஆனால், காமெடி இல்லை. படத்தின் துவக்கத்தில் வருபவர், பிறகு எங்கு போனார் என்றே தெரியவில்லை.
படம் முடியும்போது இரண்டு - மூன்று சுமாரான படத்தை மொத்தமாக பார்த்த உணர்வு ஏற்படுகிறது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பல காட்சிகள் குழந்தைகளுக்குப் பொருந்தாதவை.
இந்த காஞ்சனா வரிசையை ராகவா லாரன்ஸ் காப்பாற்ற விரும்பினால், கொஞ்சமாவது கதையிலும் திரைக்கதையிலும் கவனம் செலுத்த வேண்டும்