.
நடிகை லதாவைப் பற்றி கஸ்தூரி பதிவிட்டிருந்த டிவிட் ஒன்று சர்ச்சையை சந்தித்தது. அதற்குப் பதிலடி தரும் விதமாக, நடிகை லதாவும் பேசியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது தரப்பு விஷயங்களைச் சொல்கிறார், கஸ்தூரி.
”மிரட்டல் காரணமாகத்தான் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்களா?” எனக் கஸ்தூரியிடம் கேட்டால், ”நேற்று ஃபிளைட்டில் இருந்தேன். அதனால ஆஃப் பண்ணியிருந்தேன்.
சர்ச்சைக்கு இப்போ பெரிய மார்க்கெட் இருக்கு. எப்போவும் சர்ச்சைக்கு பயப்படவே மாட்டேன். மனதில் பட்டதை சொல்லிவிடுவேன்.
என் வாய்தான் என் எதிரி. அதனால சிலநேரம் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும்.” என்பவரிடம், சர்ச்சையான அந்த ட்விட் குறித்து கேட்டேன்.
‘பத்து ஓவர்ல மேட்ச்சை முடிச்சிடுவாங்கனு நினைச்சேன். ரொம்ப நிதானமா ஆடிக்கிட்டு இருந்தாங்க. அதை என் ஸ்டைல்ல கொஞ்சம் காமெடியா கமென்ட் பண்றதுக்காக எனக்குப் பிடிச்ச நாயகன், நாயகி நடித்த ஒரு காட்சியை ஒப்பிட்டு எழுதினேன். எம்.ஜி.ஆர் பெயரைப் பார்த்தாலே தமிழ்நாட்டில் பலரும் பொங்கிடுவாங்களேஸ அதான் நடந்தது.
சினிமாவை அதில் நடிக்கிறவங்கதானே அழுத்திச் சொல்லணும். அதைத்தான் நான் செஞ்சேன். ‘எம்.ஜி.ஆர், லதாவைத் தடவுறார்’னு சொல்றதை விரசம்னு சொல்றவங்க, மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்குன எம்.ஜி.ஆர் அதில் நடிச்சிருப்பாரான்னு யோசிக்கணும்.
அதையும் தாண்டி, கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பது தவறா என்ன?! ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில்தான் பிரச்னையே தவிர, கமென்ட் எழுதுவதிலோ, நடிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை.” என்றவரிடம், லதாவிடம் பேசியது குறித்து கேட்டோம்.
”நான் அவங்களுக்குப் போன் பண்ணி மன்னிப்பு கேட்டது உண்மைதான். இதுல என்ன மேடம் தப்புனு கேட்டேன். பாடல் காட்சியில நடிக்கும்போது, உணர்ச்சியைத் தூண்டுவதுபோல நடிக்கும்போதும் அர்ப்பணிப்போடுதானே நடிச்சிருப்பாங்க.
அவங்களைப் பார்த்துதானே நாங்களும் கத்துக்கிறோம். ‘இதை ஏன் விரசமாகப் பார்க்கிறீங்க?’னு கேட்டேன். அதற்கு, ‘நான் அப்படிப் பார்க்கல. மக்கள் அப்படிப் பார்க்கிறாங்க’னு சொன்னாங்க.
மக்களின் கண்ணோட்டத்தை புரிஞ்சுக்கச் சொல்லியும் அட்வைஸ் பண்ணாங்க. இதுபோல பேசுவதும் ஒருவகை காமெடிதான்.
எத்தனை நல்ல கருத்துக்களைப் போட்டாலும், ‘குட்டைப் பாவாடை கஸ்தூரி’னுதானே அடையாளப்படுத்துறாங்க.
பதினைந்தாயிரம் பகுத்தறிவு பேசினாலும், ஒரே ஒரு டிவிட்தான் ஃபேமஸ் ஆகும். இதுவரை பத்தாயிரம் டிவிட் போட்டிருக்கேன். இது பிரச்னையாகியிருக்கு, அவ்வளவுதான்.
இதெல்லாம் புரியாம பேசுற அளவுக்கு கஸ்தூரி மக்கு கிடையாது. எம்.ஜி.ஆர் என்ற ஆளுமைக்கு சந்தேகத்திற்குரிய எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் சரி, கண்மூடித்தனமா எதிர்க்கிறாங்க.
இது என்ன மனநிலை?! ”லிப் டு லிப் கிஸ் கொடுத்திடு’னு ‘அந்நியன்’ படத்துல விவேக், அம்பி கேரக்டர்கிட்ட சொல்வார். ‘நானா?’னு முழுக்கிற அம்பிகிட்ட, ‘இதுக்கெல்லாம் கமலையா கூட்டிக்கிட்டு வரமுடியும்?’னு சொல்வார்,
விவேக். ‘முத்தம்’ என்றால் கமல், பாகிஸ்தான் தீவிரவாதி என்றால் விஜயகாந்த்ஸ இப்படித்தான் தோணுது. ஒரு எம்.ஜி.ஆர் ரசிகையா மேட்ச் பார்க்கும்போது, எனக்கு அந்தக் காட்சிதான் ஞாபகத்துக்கு வந்தது.
அதை ஏன் யோசிக்கிறன்னு கேட்டா, என்ன பதில் சொல்ல முடியும்?!” என்றவரிடம், ”இதெல்லாம் ப்ளான் பண்ணித்தான் பண்றீங்களா?” என்றேன்.
‘1992-ல இந்த ஃபீல்டுக்கு வந்தேன். ரெண்டு வருடத்துக்கு முன்னாடிதான் பொதுவெளியில அதிகமா பேச ஆரம்பிச்சேன். அமைதியா இருக்காளேன்னு கடற்கரையில் கண்ணகிக்கு அருகே சிலையா வெச்சீங்க எனக்கு?! இன்னைக்கு என்னைக் கெட்ட வார்த்தையால் திட்டுறவங்க, அன்னைக்கு உத்தமி பட்டமா கொடுத்தாங்க?! எதுவும் இல்லையேஸ ‘நடிகைக்கு என்ன தெரியும், அவ என்ன பேசுறது, கூத்தாடிதானே’னு நினைக்கிறாங்க.
அப்படிச் சொல்றவங்களால, ‘ஆக்ஷன்’னு சொன்னா நடிக்க முடியுமா, சாப்பிடாம பட்டினியா கெடந்து உடலைக் குறைக்க முடியுமா, அவ்ளோ கஷ்டப்பட்டு ஆடுற கலைஞர்களை ஒரே வார்த்தையில் இழிவுபடுத்துறதையெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை.
இந்தப் போலித்தனம் மாறணும். நான் எம்.ஜி.ஆரைப் பற்றி தப்பா எழுதல; ரசிச்சுத்தான் எழுதியிருக்கேன். என் விளக்கத்தைப் படிச்சா அது புரியும். மத்தபடி, நடிகை லதா உள்பட பலரும் எடுக்கச் சொன்னதுனாலதான், அந்த ட்விட்டை டெலிட் பண்ணேன்.
சர்ச்சையில் விளம்பரம் தேடிக்கணும்னு நினைக்கல. நம்ம ஊர்ல தமிழிசை முடியை மட்டும் எல்லோரும் கிண்டல் பண்ணலாம்ங்கிற மனநிலை இருக்கு.
யாருக்கும் அது உருவகேலினு தெரியல. நானும் சோற்றுக்கு வழியில்லாம கவர்ச்சி நடனம் ஆடலை. எனக்கு 40 வயசு ஆகுது. இப்போவும் என்னால ஆடமுடியும்னு பெருமையோடு சொல்றதுக்குத்தான் அது. அதை ஏன் யாரும் பெருமையா பார்க்காம, ‘கவர்ச்சி’யா பார்த்தீங்க. மத்த எல்லாத்தையும் அப்படிப் பார்க்கிறவங்க, கவர்ச்சியை மட்டும் கண்டம் செய்வது ஏன்?!” என்று முடித்தார்.