இந்த நடிகர்கள் மட்டுமல்லாது, நாசர், சரத்குமார், அர்ஜுன், ராகவா லாரன்ஸ் எனப் பலர் நடிப்போடு, இயக்கத்திலும் கால் பதித்திருக்கிறார்கள். விரைவில் நடிகர்கள் ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் இயக்குநர்களாக அறிமுகமாகவிருக்கிறார்கள்.
`எல்லா இயக்குநருக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கிறான்’ என்பது பொதுமொழி. ஆனால், அந்தப் பொதுமொழியை `எல்லா நடிகருக்குள்ளும் ஒரு இயக்குநர் இருக்கிறான்’ எனப் புதுமொழியாக மாற்றிய, `நடிகர் டு இயக்குநர்’ பற்றிய தொகுப்பு இது.
எம்.ஜி.ஆர்:
வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர், கதாநாயகனாக நடிப்பதாக இருந்த பத்துக்கும் அதிகமான பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு, `நாடோடி மன்னன்’ மூலமாக தனது நீண்டகால ஆசையான இயக்கத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். நடிப்பிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படம், திரையிட்ட இடமெங்கும் அமோக வெற்றியைப் பெற்றது. எம்.ஜி.ஆர் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் இதுதான்.
காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எம்.ஜி.ஆர் இயக்கிய இரண்டாவது படம், `உலகம் சுற்றும் வாலிபன்’. எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப் படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம்பெற்ற நிலையில், `உலகம் சுற்றும் வாலிப’னில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன. `மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பி.ஆர்.பந்துலு இயக்குவதாக இருந்தது. அவர் மறைவின் காரணமாக, எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். தவிர, நடிகராகவும், இயக்குநராகவும் எம்.ஜி.ஆரின் கடைசித் திரைப்படம், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’தான்.
கமல்ஹாசன்:
`அவ்வை சண்முகி’யின் இந்தி ரீமேக்கான `சாச்சி 420′ படத்தை சாந்தனு ஷெராய் என்பவர்தான் முதலில் சில நாள்கள் இயக்கினார். அவரது வேலை கமலுக்குத் திருப்தியளிக்காததால், இயக்குநராகப் பொறுப்பேற்றார், கமல். பிறகு கமல் இயக்கிய `மருதநாயகம்’ படம் தொடர்ந்து உருவாக்க முடியாமல்போக, மீண்டும் இந்திய வரலாற்றின் மீது கமல் செய்த முயற்சிதான், `ஹே ராம்’.
தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளைச் சந்தித்தவர், கமல். நகைமுரண் என்னவென்றால், இவர் நடித்து இயக்கி பிரச்னையைச் சந்தித்த `விருமாண்டி’, `விஸ்வரூபம்’ படங்கள் மெகா ஹிட். ‘விஸ்வரூபத்தின்’ தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம் 2’வை இயக்கினார் கமல்.
சத்யராஜ் :
`அமைதிப்படை’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு சத்யராஜிடம், `இந்தப் படத்தைத் தாண்டி இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப்போறீங்க?’ என்று பலரும் கேட்டார்களாம். அந்த நேரத்தில்தான், டைரக்ஷன் முயற்சி செய்து பார்க்கலாம் என அவருக்குத் தோன்ற, கூடவே அந்தப் படம் தனது 125-வது படமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார், சத்யராஜ். அதுதான், ‘வில்லாதி வில்லன்’ திரைப்படம்.
சத்யராஜ் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து, இயக்கிய படம் இது. இது தமிழில் நன்றாக ஓடியதுடன், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு, அங்கும் வெற்றியைப் பெற்றது.
சிம்பு:
குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமடைந்திருந்த சிம்பு, கதாநாயகனாக அறிமுகமான பிறகு அவர்மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கெல்லாம் தக்க பதிலடியாக வெளியானது, `மன்மதன்’ திரைப்படம். இந்தப் படம் வெளியானபோது இயக்குநர் ஏ.ஜே.முருகன் என்றும், கதை, திரைக்கதை சிம்பு என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், 225-வது நாள் போஸ்டர் விளம்பரத்தில் `இயக்கம் மேற்பார்வை – சிம்பு’ என்று பெரிதாகவும், இயக்குநர் ஏ.ஜே.முருகன் என்பது சிறிதாகவும் அச்சிட்டிருந்தார்கள். சிம்பு-யுவன் காம்போ இந்தப் படத்திலிருந்துதான் தொடங்கியது. பிறகு, ‘மன்மதன்’ வெற்றி கொடுத்த உற்சாகத்தில், `வல்லவன்’ படத்தில் இயக்குநராக முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார், சிம்பு.
விஜயகாந்த் :
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்தார், விஜயகாந்த். அந்தச் சமயத்தில் தனது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஓர் அதிரடியான திரைப்படம் விஜயகாந்துக்குத் தேவைப்பட்டது. அதற்காக, அதுவரை நடிகராக, தயாரிப்பாளராக இருந்தவர், இயக்குநராகவும் மாறினார்.
லாஜிக் பற்றித் துளியும் கவலைப்படாமல், தனது கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு மட்டுமான விருந்தாக `விருதகிரி’யைத் தந்தார், விஜயகாந்த். பல குறைகள் இருந்தாலும், தனக்கென ஹீரோயின், டூயட், உருக்கமான ஃப்ளாஷ்பேக் என எதுவும் வைக்காமல் தவிர்த்த வகையில், இயக்குநர் விஜயகாந்த்துக்கு இதில் பாஸ் மார்க்.
தனுஷ்:
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் அவதாரங்களைத் தொடர்ந்து, `ப.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்தார், தனுஷ். அப்பா – மகன் தலைமுறை இடைவெளி கருத்து வேறுபாடுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும்
உணர்வுகளையும் ‘ப.பாண்டி’யில் கச்சிதமாகப் பதிவு செய்திருந்தார், தனுஷ்.
‘ப.பாண்டி’ வெற்றியைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, நாகர்ஜுனா, அதிதி ராவ் ஹைதரி நடிக்க, தமிழ் – தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகிவரும் பெயரிடப்படாத படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து, இயக்கிக்கொண்டிருக்கிறார்.
மேற்சொன்ன நடிகர்கள் மட்டுமல்லாது, நாசர், சரத்குமார், அர்ஜுன், ராகவா லாரன்ஸ் எனப் பலர் நடிப்போடு, இயக்கத்திலும் கால் பதித்திருக்கிறார்கள். விரைவில் நடிகர்கள் ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் இயக்குநர்களாக அறிமுகமாகவிருக்கிறார்கள்.