மதுமிதாவின் கல்யாணக் கதை
25 Feb,2019
திருமணம் முடிந்த சந்தோஷத்தில் இருக்கிறார், நடிகை மதுமிதா. தனது கல்யாணக் கதை குறித்துப் பேசியிருக்கிறார்.
“நல்ல நேரம் முடியட்டும்னு காத்திருந்தோம்!
“`முகூர்த்த நேரம் முடியப்போகுது, பொண்ணைக் கூட்டிக்கிட்டு வாங்க’னு மணமேடைகளில் கேட்டிருப்பீங்கதானே? என்னோட கல்யாணத்துல இதே சத்தம் கொஞ்சம் உல்டாவா கேட்டுச்சு. `முகூர்த்த நேரம் முடியட்டும், பொண்ணைக் கூட்டிட்டு வாங்க’னு சொன்னாங்க.
அதிர்ச்சி ஆகிடாதீங்க. எல்லாம் நல்லதுக்குத்தான்ஸ” – கலகலவெனச் சிரித்தபடியே பேசத் தொடங்கினார், `ஒரு கல் ஒரு கண்ணாடி’, `சின்ன பாப்பா பெரிய பாப்பா’ எனச் சின்னத்திரை, சினிமா இரண்டிலும் கலகலப்பூட்டிய காமெடி நடிகை, `ஜாங்ரி’ மதுமிதா.
“கொஞ்சம் புரியும்படி சொல்லிடுங்களேன்!” – மதுமிதாவிடம் கேட்டோம்.
“நானும், மோசஸ் ஜோயலும் அத்தை புள்ள, மாமா புள்ளைங்க சார். ஆனா, ரெண்டு குடும்பமும் பேசிப் பல வருடங்களாகிடுச்சு. நாங்க ஸ்கூல் போன காலத்துல பெரியவங்க சண்டை போட்டிருக்காங்களா, இல்லை வேறேதாச்சும் காரணமாஸ. என்னனு டீட்டெயிலா எங்க ரெண்டுபேருக்குமே தெரியாது.
கேட்டா, எங்க சைடுல பத்துக் காரணம் சொன்னா, அவங்க சைடுல இருபதா சொல்வாங்க. தேவையா?! அதனால, நாங்க அதைத் தெரிஞ்சுக்கவும் விரும்பல.
ஆனா, ஒரு கட்டத்துல எங்க ரெண்டுபேருக்கும் இடையில ஏதோ ஒண்ணு உருவாகி, அவர் என்னை வெச்சு குறும்படமெல்லாம் இயக்கினார்.
தொடர்ந்து சில நல்ல உள்ளங்களாலப் பிரிஞ்சு கிடந்த எங்க குடும்பங்கள் சேர்ந்து, நாங்க ரெண்டுபேரும் வாழ்க்கையில இணைய முடிவெடுத்தாங்க. ஆனா, அதன் பிறகும்கூட எனக்கும், ஜோயலுக்கும் ஒருவித பீதி இருந்துக்கிட்டே இருந்தது.
கல்யாணப் பேச்சு தொடங்கியதுல இருந்து அவர் என் கழுத்துல தாலி கட்டிய நிமிடம் வரை சொந்தக்காரங்க, அங்காளி பங்காளிங்களுக்கு இடையில எந்த நேரத்துல என்ன பிரச்னை வெடிக்குமோனு பயந்துகிட்டேதான் இருந்தோம்.
அந்தளவுக்குச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ஈஸியா பத்திக்கிடுற மாதிரியான ஒரு சூழல் நிலவிக்கிட்டிருந்தது உண்மை. மணமேடையில என் கழுத்துல தாலி ஏறுன அந்த நொடிதான், அப்பாடானு இருந்தது!” என்றவர்,
“கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு நானும், அவரும் ஒரு விஷயத்துல மட்டும் உறுதியா இருந்துடணும்னு பேசி வெச்சுக்கிட்டோம். அதாவது, `எந்த நேரம் யாருக்கிடையில என்ன சண்டை நடந்தாலும் சரிஸ நாம புருஷன் பொண்டாட்டி ஆகுறவரை நகரக் கூடாது’ங்கிறதுதான் அது.” என்கிறார்.
“சரி, முகூர்த்த நேரம் தள்ளிப்போனது ஏன்?” – கேட்டோம்.
“மூணு மாசத்துக்கு முன்னாடி கல்யாணத்துக்கு நாள், நேரமெல்லாம் குறிச்சப்போ 7.30 – 9 மணினு முகூர்த்த நேரம் குறிச்சாங்க. அப்போ அது நல்ல நேரமா இருந்திருக்கு.
ஆனா, கல்யாணத் தேதியில அந்த நேரத்துல `குளிகை’ வருதுன்னு சொன்னாங்க. `குளிகை’ நேரத்துல கல்யாணம் பண்ணக்கூடாதாம்!. `இதனால முகூர்த்த நேரம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை’னு சொன்னாங்க.
அமைச்சர் ஜெயக்குமார் சரியா இந்த நேரத்துலதான் அரங்கத்துக்கு வாழ்த்த வந்தார். அவர்கிட்டகூட விஷயத்தைச் சொல்லாம, அவரையும் மணமேடையில ஏற விடாம, கீழே இருந்தபடியே ஆசி வாங்கினோம்.
பெரியவங்க சிலர் சொன்ன இந்தக் கருத்தையும் புறக்கணிக்க முடியல. அதனாலதான் குறித்த நேரத்துல மணமேடையில ஏற வேண்டாம்னு சொல்லிட்டாங்க.
ஆனா, இந்த விஷயத்தைக்கூட சிலர், `பாருங்க சகுனமே சரியில்லை’னு சொன்னதா எங்க காதுக்கு நியூஸ் வந்தது. மல்லுக்கட்ட எப்படியெல்லாம் முயற்சி பண்ணியிருக்காங்க, பாருங்களேன்!” எனச் சிரிக்கிறார், மதுமிதா.