“என் மகள்கிட்டே, `பப்பு உனக்கு ஓகே.ன்னா அப்பாகூட போகலாம்னு சொன்னேன். படிக்கட்டில் என்னை எட்டி உதைச்சது, ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சதுன்னு நான் முன்னாடி இவர்கிட்ட பட்ட கஷ்டத்தையெல்லாம் அவ பார்த்திருக்கா அப்படிங்கிறதால, `வேணாம் மம்மி, அங்கே போனா சண்டை வரும்’னு சொல்லிட்டு அழறா.’’
பிக்பாஸ் நித்யாவுக்கும் அவர் கணவர் பாலாஜிக்கும் இடையே சண்டை, பாலாஜி மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் என்று மறுபடியும் பிரச்னை எழுந்திருக்கிறது.
ஒரு குடும்பப் பிரச்னை மறுபடியும் மறுபடியும் பொதுவெளிக்கு வந்துகொண்டிருக்கிறதேஸ பிக்பாஸின் முடிவில், `அவர் செய்த தவறுகளை மன்னிக்க ரெடியாக இருக்கேன்.
ஆனா, பழையபடி என்னையும் என் மகளையும் துன்புறுத்தாம இருந்தா போதும்’ என்று பாசிட்டிவாகச் சொல்லிவிட்டு சென்றவருக்கு மறுபடியும் பிரச்னை என்றவுடன் நித்யாவிடம் பேசினோம்.
தேசிய பெண்கள் கட்சியின் பணி நிமித்தமாக டெல்லியில் இருந்தவர், வருத்தத்துடன் தன்னுடைய நிலைமையைப் பகிர்ந்துகொண்டார்.
நித்யா
“எங்களுக்கு கல்யாணமாகி 10 வருஷமாயிடுச்சு. அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் அவரோட சந்தேக குணம் மட்டும் மாறவே இல்லைங்க. அன்பா சொல்லிப் பார்த்துட்டேன். அழுது சொல்லிப் பார்த்துட்டேன்.
பிரிஞ்சுப் போய் உணர்த்த முயற்சி செய்தேன். பிரிஞ்சு பிறகு சேர்ந்தும் டிரை பண்ணிட்டேன். பாலாஜிக்கு மறுவாழ்வு மையத்துல சிகிச்சை, மன நல ஆலோசனை என்றும் முயற்சி செய்து பார்த்துட்டேன். ம்ஹூம்ஸ எதுவுமே அவரை மாத்தலை.
சரி, அவர் சொல்ற மாதிரி நான்தான் தப்பானவள்னே வைச்சுக்குவோம். இதுவரைக்கும் குறைஞ்சது 25 ஆம்பளைங்க கூடவாவது என்னை சேர்த்து வைச்சு தப்பா பேசியிருப்பாரு.
ஐ.டி கம்பெனியில் வேலைக்குப் போனா அங்க ஒருவரை சேர்த்து வைச்சுப் பேசினார். பி.பி.ஓ போனேன். அங்க ஒருவரை சேர்த்துப் பேசினார்.
ஹாஸ்பிட்டல் போனா அங்கே டாக்டரோட சேர்த்து வைச்சுப் பேசறார். இந்தத் தொல்லையே வேணாம்னு ஒரு ஸ்கூலில் டீச்சரா வேலைக்குப் போனா, பிரின்சிபாலுக்குப் போன் செய்து `அவளை எதுக்கு வேலையில வைச்சீங்க,
அவ ஸ்டூடண்ட் யாரையாவது இழுத்துட்டு ஓடிடுவா’ன்னு சொல்றாரு. எம்.பி.ஏ படிக்கப் போனா, அங்கே படிக்க வர்ற என்னைவிட சின்னப் பசங்களோட சேர்த்து வைச்சுப் பேசறார்.
சரின்னு வேலையை விட்டுட்டு வீட்டிலேயும் உட்கார்ந்து பார்த்திருக்கேன். அப்போவும் அவர் மாறலை. ஜிம்முக்குப் போனா, அந்த கோச்சை என்கூட சேர்த்து வைச்சுப் பேசறார்.
எல்லாத்தையும்விட கொடுமை, எங்களை சேர்த்து வைக்கலாம்னு வந்த போலீஸ்காரரையும் இவருடைய தப்பான வாய் விட்டு வைக்கலை.
இத்தனைக்கும் அவரை நான் அண்ணான்னுதான் கூப்பிடுவேன். நான் சோஷியல் சர்வீஸ் பண்ணிக்கிட்டிருக்கிறது எல்லோருக்கும் தெரியும்.
அதுல பிரெஸ்ட் கேன்சர் சென்டர் வைச்சிருக்கார் ஒருவர். என் சோஷியல் சர்வீஸ் விஷயமா அவரை மீட் பண்ணப் போனா, அதையும் சந்தேகப்படறார்.
தீபாவளி நேரத்தில், என் வீட்டு வாசலில் ஒரு பைக் நின்னுக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டு சண்டை போட்டார். நான், `உள்ளே வந்து செக் பண்ணிப் பார்த்துக்கோங்க’ன்னு சொல்லிட்டேன்.
அப்புறம், எதிர்வீட்டுக்கு வந்த கெஸ்ட் ஒருவர் அந்தப் பைக்கை எடுத்துட்டுப் போனார். அது வரைக்கும் அந்தத் தெருவிலேயே பாலாஜி சுத்திக்கிட்டே இருந்தார். பொங்கல் நேரத்திலும் பிரச்னை பண்ணார்.
அப்புறம், ஆளுங்களை வைச்சு வீட்டு மேலே கல்லு விட்டு எறிய வைச்சார். மனசு வெறுத்துப் போச்சு எனக்கு. இத்தனைபேர் கூட ஒரு பொண்ணு எப்படிங்க தப்பா பழக முடியும்? சந்தேகத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா’’ என்றவரின் கேள்விகளில் போராடிக் களைத்த சோர்வு தெரிகிறது.
“பிக்பாஸ் முடிவில் கமல் சார் சொன்ன மாதிரி 100 நாள் சேர்ந்து வாழ நான் ரெடியாகத்தான் இருந்தேன். ஏன்னா, எங்க ரெண்டு பேர் சண்டையால என் பொண்ணு அவ அப்பாவோட பாசத்தை இழந்துடக் கூடாதுன்னு நினைச்சேன்.
பாலாஜிகிட்ட `தனி வீடு பாருங்க’ன்னுகூட சொல்லிப் பார்த்துட்டேன். அப்படியாவது அவருடைய சந்தேகத்துக்கு ஒரு முடிவு வந்துடாதுன்னு ஒரு நப்பாசைப் பட்டேன். ஆனா, அதுக்கும் அவர் பிடி கொடுக்கலை.
என் மகள்கிட்டே, `பப்பு உனக்கு ஓகே-ன்னா அப்பா கூட போகலாம்னு சொன்னேன். படிக்கட்டில் என்னை எட்டி உதைச்சது, ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சதுன்னு நான் முன்னாடி இவர்கிட்ட பட்ட கஷ்டத்தையெல்லாம் அவ பார்த்திருக்கா அப்படிங்கிறதால, `வேணாம் மம்மி, அங்கே போனா சண்டை வரும்’னு சொல்லிட்டு அழறா.
வெளி உலகத்துக்கு என் பொண்டாட்டி, என் பொண்ணுன்னு வேஷம் போட்டுட்டு, உள்ளுக்குள்ளே இவ்வளவு கொடுமைகள் பண்ணியிருக்கார்.
என்னை தப்பானவளா எல்லோருக்கும் காட்டிட்டு அவர்தான் தன்னுடைய முதல் மனைவி கூட பழகிட்டிருக்கார். என்னோட பெண் தோழிகள் வீட்டுக்குப் போனால், அவங்களுடைய மாமியார்கிட்டே என்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்றார்.
என்னை எல்லார்கிட்டேயும் பிரிச்சு வைக்கணும்னு பார்க்கிறார். கமல் சார் சொன்னதற்காக இவர் கூட சேர்ந்து வாழணும்னு நினைச்சேன். இப்ப அதுவும் முடியலை. மொத்தமா பிரிஞ்சுடலாம்னு முடிவெடுத்துதான் புகார் கொடுத்தேன்’’ என்று விரக்தியாகத் தன் பேச்சை முடித்தார் பிக்பாஸ் நித்யா.
நித்யாவின் புகார் குறித்து பாலாஜியிடம் பேசினோம்,
“இது அத்தனையும் நாடகம். உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்ஸ நித்யா யார், நித்யா என்கிற நபர் மக்கள் மத்தியில் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் யார்? பாலாஜி என்பவர் இல்லையென்றால் நித்யா என்பவர் எப்படி பிரபலமாகியிருப்பார்? இதுதான் என் கேள்வி.
இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பகிர நினைக்கிறேன். நித்யா, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் நடித்தார்.
ஆனால், உண்மையில் என்னைவிட அவர்தான் இன்னும் திருந்தாமல் இருக்கிறார். பெண்கள் சார்ந்த அமைப்பில் இருக்க அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. நான் குண்டாசை வைத்து மிரட்டியதாகச் சொல்லப்பட்டதெல்லாம் பொய்.
பிக் பாஸில் இருந்து நான் வெளிவந்த பிறகு, இதுவரை ஒரு முறைகூட போஷிகாவைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தந்தையாக நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். வேதனையில் இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். நித்யா எதோ ஒரு விஷயத்தில் எங்கேயோ லாக் ஆகியிருக்கிறார்.
பாலாஜியுடன்
நானும் நித்யாவும் ஒன்றாக இருந்தபோது, ஜிம் டிரெயினரைப் பார்க்க என்னிடம் பணத்தை வாங்கிட்டு, அம்மாவைப் பார்க்கப்போவதாகச் சொல்லி, போஷிகாவோடு பெங்களூர் போறாங்க.
போலீஸ் மனோஜ் என்பவர் அந்த ஜிம் ட்ரெயினர் போனை ரெக்கவரி பண்ணார். அதில் நிறைய படங்கள் ஜிம் டிரெயினரும் நித்யாவும் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் இருந்திருக்கின்றன.
அதன் பிறகுதான் மனோஜ் நித்யாவுக்கு உதவியாக இருந்து வருகிறார். நித்யா பிக் பாஸிலிருந்து 28 நாள்கள் கழித்து வெளியில் வந்த பிறகு, மனோஜ் என்கிற போலீஸூடன்தான் வெளியில் அதிகம் சுற்றியிருக்கிறார்.
மகளிர் அமைப்பில் இருப்பதைக் காரணம்காட்டி, மனோஜை போலீஸ் ஸ்டேஷனில் சென்று அடிக்கடிப் பார்த்திருக்கிறார். காக்கி சட்டைப் போட்டிருப்பதால் ஒரு குடும்பத்தைக் கெடுக்கலாமா நீங்களே சொல்லுங்க..?
இப்போது வரை, கமலுடன் இருக்கும் மூர்த்தி என்பவர் எனக்குப் போன் பண்ணி, `போஷிகாவை ஸ்கூல்ல சேர்ந்த்திட்டீங்களா’னு கமல் சார் விசாரிப்பதாக என்கிட்ட கேட்பார்.
பிக் பாஸ்ல இருந்து வெளியில் வந்த பிறகு இப்போது வரை வாரம் ஒரு முறை போன் பண்ணி தொடர்ச்சியா விசாரிக்கிறார் கமல். இப்போது வரை போஷிகாவுக்காகத்தான் இரண்டு பேரும் ஓடுறோம், ஓடினோம், ஓடப்போறோம். புது ஸ்கூலில் போஷிகாவை சேர்க்க நான் எவ்வளவோ முயன்று வருகிறேன்.
ஆனால், எதற்கும் நித்யா ஒத்துழைப்புத் தரவில்லை. ஒரே நாளில் எங்களுடைய மூன்று வழக்கும் டிஸ்மிஸ் ஆனது. நான் பிக் பாஸ்ல இருந்ததால என்னால் வழக்கில் ஆஜராக முடியவில்லை.
இப்போது, மறுபடியும் அந்த விவாகரத்து வழக்கை நித்யா ஆரம்பித்திருக்கிறார். பாலாஜியை அசிங்கப்படுத்த நினைப்பவங்க ஏன் பிக் பாஸுக்கு வரணும்.
நல்லவர்போல இப்போது முகத்தைக் காட்ட நினைக்கிறார் நித்யா. எத்தனை வழக்குகள் வந்தாலும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என் போஷிகாவுக்காக’’ என்றார் பாலாஜி.