“என் நிஜப்பெயர் கருப்பு ராஜா. குலதெய்வமான கருப்பன் பேரைத்தான் அம்மாவும் அப்பாவும் எனக்கு வெச்சாக. அந்தக் கருப்புதான், இப்போ மக்க மனசுல பதிஞ்சிருக்கான்’’ – கஞ்சா கருப்பு பேசப்பேச நமக்குள் மதுரை சித்திரைத் திருவிழாவுக்குப் போய் வந்த உணர்வு. டீக்கடை டூ சினிமா பயணத்தை நூல் பிடித்ததுபோல் பிசிறில்லாமல் பேசுகிறார்.
“தேனி, பெரியகுளம்தான் நமக்குச் சொந்த ஊர். என்னையும் சேர்த்து வீட்ல மொத்தம் அஞ்சு பசங்க. அக்கா, அண்ணன், தங்கச்சி, தம்பி எல்லோருமே ஓரளவுக்குப் படிச்சவங்க.
நானும் பள்ளிக்கூடம் போனவன்தான். ஆனா, படிக்காதவன். சாப்பிடுறதுக்காகவே பள்ளிக்கூடம் போனேன்னு சொல்லலாம்.
எனக்கு 5 வயசு இருக்கும்போது, என் அப்பா காந்தி வயித்து கேன்சரால தவறிட்டாப்ல. இன்னொரு விஷயம் தெரியுமா, நான் பிறந்ததே சினிமா கொட்டைகையிலதான்!’’ கண்கள் விரியப் பேசுகிறார் கஞ்சா கருப்பு.
கஞ்சா கருப்பு
“அம்மா அப்போ நிறைமாச கர்ப்பிணி. எம்.ஜி.ஆர் நடிச்ச `நினைத்ததை முடிப்பவன்’ படம் பக்கத்துக் கொட்டகையில ஓடிக்கிட்டு இருந்திருக்கு.
‘இந்த நிலைமையில படத்துக்குப் போக வேணாம்’னு அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காம, `எம்.ஜி.ஆர் படத்தைப் பார்த்தே தீருவேன்’னு சொல்லிட்டுப் போயிடுச்சு அம்மா.
எம்.ஜி.ஆர், வாள் வீசி சண்டைபோடுற நேரம், நான் பொறந்துட்டேன். என் அம்மா தனலட்சுமி என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே, நான் சினிமா கொட்டகையில ஸ்கிரீனைப் பார்த்துட்டேன். அப்போவே நான் சினிமாவுக்குத்தான் வரணும்னு இருந்திருக்கு’’ என்பவர், அப்பா இறந்த தருணம் பற்றிச் சொல்கிறார்.
“நாளைக்குத் தீபாவளின்னா, இன்னைக்கு அப்பா இறந்துட்டார். அப்போ எனக்கு 5 வயசு. ஊர்ல பசங்க எல்லோரும் வெடி, மத்தாப்புனு வெடிச்சுக் கொளுத்தி விளையாடுறாக, பலகாரம் சாப்பிடுறாக. எங்க வீட்டுல எல்லோரும் அழுதுட்டு இருக்கோம்.
`அப்பாவுக்கு என்னாச்சுமா’னு அம்மாக்கிட்ட கேட்டா, `சாமிகிட்ட போயிட்டாருடா’னு அழுது. அடுத்து, ஆறு வயசுல பள்ளிக்கூடம் போகணும்.
நான் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். ‘சாப்பிடுறதுக்காவது போ’னு அம்மா அனுப்பி வெச்சுச்சு. 17 வயசுல ‘இனிமே பள்ளிக்கூடம் போகலை’னு சொல்லிட்டேன்.
`டேய் அக்கா, அண்ணன் எல்லாம் படிச்சிருக்காக. நீ மட்டும் ஏன்டா’னு கேட்டுச்சு. ‘நான் உனக்கு சம்பாதிச்சுப் போடுறேன்’னு சொல்லி அம்மாவோட சித்தப்பாகிட்ட, `சைக்கிள் வாங்கிக் கொடுங்கய்யா. அதை வாடகைக்கு விட்டுப் பொழச்சுக்கிறேன்’னு சொன்னேன்.
அப்போ ஒரு சைக்கிளோட விலை 1,500 ரூபாய். எனக்குப் பத்து சைக்கிள் வாங்கிக்கொடுத்தாக. அதை வாடகைக்கு விட்டேன். ஒரு மணி நேரத்துக்குப் பத்து ரூபா.
வர்ற வருமானத்தை வீட்டுக்கும் கொடுத்துட்டு, மிச்சப் பணத்தை சேர்த்து படிப்படியா சைக்கிளை வாங்கி நிறுத்த ஆரம்பிச்சேன்.
அப்படி 55 சைக்கிள் வரைக்கும் வாங்கிட்டேன். சைக்கிள் எடுக்க வர்றவங்க எல்லோரும் டீ குடிக்க அங்கிட்டு இங்கிட்டு போறதைக் கவனிச்சேன்.
‘நாமளே ஒரு டீக்கடையை வெச்சா என்ன’னு தோணுச்சு. பக்கத்திலேயே கடையைப் போட்டேன். சைக்கிளை எடுத்துட்டுபோய் கொண்டுவந்து விடுறவங்க பசிச்சு ஹோட்டல் தேடுறதையும் கவனிச்சேன். ஹோட்டலும் வெச்சேன்.
கஞ்சா கருப்பு திருமணம்
அப்படி ஒருநாள், என் கடைக்கு எதிரே ஒரு புது கார் வந்து இறங்குது. யார்றானு பார்த்தா, டைரக்டர் பாலா அண்ணன் இறங்குறார்.
`இட்லி கிடைக்குமா?’னு கேட்டார். `நெறைய கெடைக்கும்ணே வாங்க’னு சொன்னேன். 5 இட்லி, ஒரு ஆஃபாயில், ஆம்லெட் கொடு’ன்னார்.
ஒறப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, தேங்காய், புதினானு அஞ்சு வகை சட்னி போட்டு அவரைக் கவர் பண்ணிட்டேன். ஆமாம், நம்ம கடையில எப்போவும் ஐந்து வகை சட்னிதான்.
`வெச்சுப் பார்க்கிற இடத்துல வித்துப் பார்க்கணும்’னு எங்கய்யா ஒரு வார்த்தை சொல்வாக. பேசுனாதான் ஹோட்டலுக்கு கஸ்டமரை வரவைக்க முடியும். அப்படி ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பாத்தியம் பார்க்க ஆரம்பிச்சாச்சு.
இதுக்கிடையில கடைக்கு அடிக்கடி வந்த பாலாண்ணனோட ஃப்ரெண்ட்கிட்ட பழகுனதுல அவர்கிட்ட சினிமா வாய்ப்பு கேட்டேன். “இவனுக்குப் `பிதாமகன்’ல ஒரு ரோல் கொடுக்கிறேன்டா. பண்ணச் சொல்லு’’னு பாலாண்ணன் சொன்னார்.
கூடவே, “சொந்த பந்தம்னு எல்லோர்கிட்டேயும் சொல்லிட்டுத் திரியக் கூடாது. என் கூடவே கொடையைப் புடிச்சிட்டு நிக்கிற, சாப்பாடு கொடுக்கிற, ஏதாவது வேலை இருந்தா செய்ற.
அப்புறமா உனக்கு ஏதாவது ஒரு ரோல்ல நடிக்க சான்ஸ் தரேன்’’னு சொல்லிட்டார். அப்படித்தான், ‘பிதாமகன்’ல நடிச்சேன்.
பெரியகுளத்தில் ஷூட்டிங் முடிஞ்சதும் சென்னைக்கு எல்லோரும் பேக் பண்ணும்போது, `டேய் இவன் நல்லா வேலை பார்க்கிறான்டா, இவனை சென்னைக்குக் கூட்டிக்கிட்டு வந்திடுங்க’னு பாலாண்ணன் சொன்னார்’’ என்றவர் தொடர்ந்தார்.
“உதவி இயக்குநர் ரவிதான் `மெட்ராஸுக்கு வாடா’னு சொன்னார். அஞ்சு கைலி, அஞ்சு சட்டையை எடுத்துட்டு மெட்ராஸுக்குக் கிளம்பி வந்துட்டேன்.
அவர் ஆபீஸுக்கு வந்ததும், `பேன்ட், சட்டையைப் போட்டுட்டு வாடா’னு சொல்றாக. ‘அதெங்க இருக்கு’னு முழிச்சப்போ, பட காஸ்டியூம்ல ஒண்ணு ரெண்டை எனக்குக் கொடுத்தாக! அதை அப்படியே போட்டுக்கிட்டேன்.
அங்கேயே இருந்து வேற வேற ஆபீஸுக்குப் போய் வாய்ப்பு தேட ஆரம்பிச்சுட்டேன். `கூரையைப் பிச்சுக்கிட்டு கோடிக் கோடியா பணம் கொட்டும்னு சொல்வாங்கல்லஸ அப்படித்தான் ஒருநாள் ராத்திரி 10 மணி இருக்கும்.
அமீர் சார் ஆபீஸ்ல இருந்து போன். `கஞ்சா கருப்பு நீங்கதானே, சார் வரச் சொன்னார்’னு கூப்பிட்டாங்க. என்னைக் கூட்டிக்கிட்டு வந்த பாலாண்ணன்கிட்ட சொல்லிட்டுப் போகலாமா வேண்டாமானு நீண்ட யோசனை.
ஆர்ட் டைரக்டர் செல்வா அண்ணன்தான், `டேய் அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ போய் அவரைப் பாரு’னு சொன்னார். அந்த நல்ல மனுஷன் இப்போ உயிரோடு இல்லை.
ரெண்டு பேரும் கூப்பிட்டாலும் நடிக்கணும்டானு சொன்னது செல்வா அண்ணன்தான். அப்படித்தான் `ராம்’ வாய்ப்பு கிடைச்சது.
ஆனா, முதல்ல பேசி நடிச்சது பாலா சார் படமான `பிதாமகன்’லதான். பாலா சாரின் கையால குட்டு வாங்கின நேரம், `சண்டக்கோழி’, `சிவகாசி’, `கள்வனின் காதலி’, `தாமிரபரணி’, `சுப்ரமணியபுரம்’, `நாடோடிகள்’னு வரிசையா நிறைய படங்கள் பண்ணினேன்’’ என்பவருக்கு, சினிமாவில் சறுக்கல்களும் நிறைய!
“என் வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்பு, படம் பண்ணத் தெரியாத ஒருவரை வச்சு தயாரிச்சதுதான். `படம் நடிக்கிறீயா, அதை மட்டும் பண்ணு. உனக்கு எதுக்கு இந்த வேலை’னு மேடையிலேயே பாலா சார் என்னைத் திட்டினார்.
ஆறேழு வருடமாச்சு. சூடு பட்ட பிறகுதான் தப்பிச்சிருக்கேன். நிறைய லாஸ் ஆகிடுச்சு.’’ என்பவர் தன் மனைவி சங்கீதாவைப் பார்க்கிறார்.
“உங்கள் திருமணம் பற்றிச் சொல்லுங்களேன்ஸ’’ என்றால், அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார் டாக்டர் சங்கீதா.
“மருத்துவம் இறுதியாண்டு படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போதான், இவரு என்னைப் பொண்ணுப் பார்க்க வந்தாரு. இவருடைய வெகுளித்தனம், வெளிப்படையான பேச்சு எனக்குப் பிடிச்சுப் போச்சு’’ என சங்கீதா நிறுத்த, “அது ஒரு பெரிய கதைங்கஸ’’ என்று தொடர்கிறார் கருப்பு.
“எனக்குப் பல வருடமா பொண்ணு கிடைக்கல. காரணம், நான் சினிமாக்காரன். இன்னொண்ணு, எங்க அப்பாவுக்கு வந்திருந்த நோயைக் குணப்படுத்தக்கூடிய டாக்டருங்க இருந்திருந்தா என் அப்பாவைக் குணப்படுத்தியிருக்க முடியும்ல!
அதனால, `கட்டுனா டாக்டர் பொண்ணைத்தான் கட்டணும்’னு மனசுல ஒரு வைராக்கியம். அந்த ஏக்கம்தான், என் கல்யாணத்தை லேட் பண்ண வச்சிடுச்சு.
நான் முதல்ல பொண்ணுப் பார்க்கப் போகல. என் அம்மாவும் தங்கச்சியும் பார்த்துட்டு வந்து, வந்தா இந்தப் பொண்ணுதான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்’னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம்தான் நான் இவங்களைப் பார்க்கப் போனேன்’’ மனைவியைப் பார்த்துச் சிரிக்கிறார் கருப்பு.
“எங்க வீட்லயும் கட்டுனா இந்த மாப்பிள்ளையைத்தான் கட்டிக்கணும்னு பிடிவாதமா இருந்தாங்க. எனக்குக் கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.
அதேமாதிரி, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ‘அவரு படிக்காதவரு, சினிமாக்காரரு வேண்டாம்’னு சொன்னாங்க. எனக்குக் குழப்பம்.
இவரு பொண்ணு பார்த்துட்டுப் போனபிறகு, அன்னைக்கு சாயங்காலம் எனக்குப் போன் பண்ணாரு. சின்ன வயசுல இருந்து இப்போவரை, தான் செய்த நல்லது, கெட்டதுனு எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னாரு. இவரு அப்படிப் பேசுனது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போயிடுச்சு’’ என்கிறார் சங்கீதா.
“கல்யாணம் முடிவானதும் மொத பத்திரிகையே பாலா, அமீர் அண்ணன்களுக்குத்தான் கொடுத்தேன். அந்தக் கல்யாண மேடையில பாலா, அமீர்னு இரண்டு சிகரங்களையும் ஒண்ணு சேர்த்தேன்.
இரண்டு பேரும் எனக்கு இரண்டு மோதிரம் போட்டாக. இன்னும் அதைப் பத்திரமாக வச்சிருக்கேன். அப்போ சொன்னாங்க. `இது சினிமா இல்லடா. நடிக்கப்போனீனா,
வீட்டுக்கு வரும்போது அதை வாசல்லேயே விட்டுட்டு வந்துடணும். வீட்டுக்குள்ளே போகும்போது குடும்பஸ்தனா இருக்கணும்’னு அட்வைஸ் பண்ணாக. அதை இப்போவரை கடைப்பிடிக்கிறேன்’’ என்கிறார் கருப்பு.
கஞ்சா கருப்பு
“இவரு நடிச்சதுல `களவாணி’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். இதுவரை பத்து தடவைக்கும்மேல பாத்திருப்பேன். என் பசங்களுக்கும் அந்தப் படம் பிடிக்கும். `புலிவேசம்’ படத்துல இவரு இறந்துடுற மாதிரி ஒரு சீன். என்னால அதைத் தாங்கிக்கவே முடியல.
படத்தைப் பார்த்துட்டு அழுதுட்டே இருந்தேன்’’ என்கிற சங்கீதா, “இடையில சில வருடம் அவருக்கு நல்ல ரோல் கிடைக்கல. அதனால, வந்து விசாரிக்கக்கூட ஆள்கள் இல்லை. இப்போ நடிக்கக்கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க. சந்தோஷம்’’ என்கிறார்.
`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு அழுதது பற்றிக் கேட்டதற்கு, “அந்த 27 நாள்கள் வேதனையானவை. அவர் அழுததைப் பார்த்துட்டு எங்க குடும்பமே அழுதுட்டோம்.
அவருக்கு எதையுமே மனசுல வெச்சுப் பேசத் தெரியாது. அதனாலதான், அங்கே அப்படி நடந்துக்கிட்டார். அங்கே சரியா நடந்திருந்தா, இன்னும் நல்ல பேரோட வந்திருக்கலாம்’’ என்றவரிடம் குழந்தைகளைப் பற்றிக் கேட்டேன்.
“செல்லப் பையனாகப் பிறந்தவனுக்கு, `காந்தி நாதன்’னு அப்பா பெயரை வெச்சேன். பிரசவம் பார்த்த டாக்டர் சரவணன், `கொஞ்சம் ஸ்டைலா பேர் வைங்க. காந்தியும் இருக்கட்டும்’னு சொல்லி, `தருண் காந்த்’னு வெச்சார்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் வரிசையில இதுவும் இருக்கட்டுமேனு ஓகே சொல்லிட்டேன். அடுத்து பொண்ணு பொறந்தா. அவளுக்கு `அனாமிக்கா’னு பெயர் வைக்கச் சொல்லிட்டார்.
நான் முதல்ல வெச்ச பெயர், `சொர்ணகாளீஸ்வரி என்கிற வீரலட்சுமி.’ குலதெய்வ பெயரை விட்டுடக் கூடாதுல்ல. மனைவி வந்த பிறகு, நிறைய விஷயம் என் வாழ்க்கையில மாறியிருக்கு. சரியான நேரத்துக்கு வீட்டுக்குப் போறேன்.
என் அம்மா தனலட்சுமிக்கு இப்போ 77 வயசு. ஆனாலும், சொந்த பூமியைவிட்டு வரமாட்டேன்னு விவசாயத்தைப் பார்த்துக்கிட்டிருக்கு. வாரத்துக்கு ஒருவாட்டி போய் பார்த்துட்டு வர்றோம். என் குடும்பம்தான் என் உலகம்!’’ என்று மனைவியைக் கட்டியணைத்துகொள்கிறார் கஞ்சா கருப்பு.