`ஆர்யாவுக்குக் கல்யாணம்னு நான் ஏன் அழணும்?’’ – `
14 Feb,2019
`எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், அபர்ணதி. வசந்தபாலன் இயக்கும் `ஜெயில்’ படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆகிறார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. `எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொடர் மூலமா சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்தது. இப்போ வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் வசந்தபாலன் சார் கொடுத்திருக்கார்.
அவர் இயக்கத்தில் நடிச்சிருக்கிற `ஜெயில்’ படம் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும்!” பாசிட்டிவான வார்த்தைகளுடன் உரையாடலைத் தொடங்குகிறார், அபர்ணதி.
அபர்ணதி
“நான் சென்னைப் பொண்ணுனு பலரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. என் சொந்த ஊர் கும்பகோணம். காலேஜ் முடிச்சுட்டுச் சென்னைக்கு வந்தேன்.
சென்னையில எனக்குப் பல நண்பர்கள் இருக்காங்க. அதனால, சென்னை லோக்கல் பாஷை எனக்குச் சரளமா வரும். வசந்தபாலன் சாருடைய `ஜெயில்’ படத்துல நடிக்க இது எனக்குப் பெரும் உதவியா இருந்துச்சு.
இந்தப் படத்துல கொஞ்சம்கூட மேக்கப் இல்லாம வடசென்னை ஏரியா பெண்ணா வாழ்ந்திருக்கேன்னே சொல்லலாம். இயல்பா இருக்கணும்ங்கிறதுக்காக, மேக்கப் கூடவே கூடாதுனு வசந்தபாலன் சார் சொல்லிட்டார். நாற்பது நாள் ஷூட்டிங்கை ரொம்ப சந்தோஷமா நடிச்சு முடிச்சுக் கொடுத்தேன்.
ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும், நைட்டி போட்டுக்கிட்டு தலையை அள்ளி முடிச்சுக்கிட்டு, கத்திக்கிட்டே சுத்திக்கிட்டு இருப்பேன்.
ஸ்பாட்ல ஷூட்டிங் வேடிக்கை பார்த்த பலரும், `இந்தப் பொண்ணு `எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதிதானே?!’னு கொஞ்சம் சந்தேகத்தோடுதான் என்னைப் பற்றிப் பேசிக்குவாங்க.
நடிக்கிறதைப் பார்த்து `அக்கா, சூப்பர்’னு அவங்க என்கரேஜ் பண்ணும்போது, ஏதோ நம்ம ஃபேமிலி முன்னாடி நின்னு நடிக்கிற மாதிரியே ஒரு ஃபீலிங் கிடைக்கும்.
வசந்தபாலன் சார் நடிப்புல எனக்குப் பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தார். அவருடைய கதைக்கு எதார்த்தமான ஒரு பொண்ணு நடிக்கத் தேவைனு சொல்ல, அவருடைய உதவி இயக்குநர் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கார்.
வசந்தபாலன் சாரும் `எங்க வீட்டு மாப்பிள்ளை’ எபிசோடுகள்ல சிலதைப் பார்த்து, என்னை நேர்ல சந்திச்சுப் பேசினார். இப்படித்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது. ரொம்ப ஜாலியான மனிதர் வசந்தபாலன் சார்” என்றவர், தொடர்ந்தார்.
ஜெயில் படம் பற்றி அபர்ணதி
“என் மேனேஜர் என்கிட்ட, `வசந்தபாலன் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகமா பேசமாட்டார்’னு சொன்னார். ஆனா, வசந்தபாலன் சார் அதுக்கு நேரெதிர்.
படத்தோட ஹீரோ, ஜி.வி.பிரகாஷ். அவரும், நானும் ஷூட்டிங் போன முதல் ரெண்டு நாள் எதுவும் பேசிக்கலை. அவர் செட்ல ரொம்ப அமைதியான ஆள். பிறகு கொஞ்சநாள்ல ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம்.
`என்ன மியூசிக் சாப்டியா? சவுண்டே இல்ல!’ இப்படித்தான் அவர்கிட்ட பேசுவேன். அவரும் என் கமென்ட்ஸை ஜாலியா எடுத்துக்குவார். ரொம்ப நேர்மையான மனிதர்.” என்று முடித்தவரிடம், படத்தில் இருக்கும் லிப்லாக் காட்சி அனுபவம் குறித்துக் கேட்டேன்.
“அய்யோ! அப்படியெல்லாம் ரொம்ப முக்கியமான காட்சியெல்லாம் இல்ல அது. ரொம்பக் குட்டியான ஒரு சீன் அது. கதைக்குத் தேவைப்பட்டதால, அதுக்கு ஓகே சொன்னேன்.
படத்துக்கு டப்பிங் பேசுறப்போ, வசந்தபாலன் சார் சுடுதண்ணியை வெச்சுக்கிட்டு என் பக்கத்துல உட்கார்ந்திருப்பார். டப்பிங் பேசுறப்போ அவர் எதிர்பார்த்த மாடுலேஷன் வரலைனா, `சுடு தண்ணியைக் குடிச்சுட்டு, இன்னும் கத்திப் பேசு’னு சொல்லித் தருவார்” – `ஜெயில்’ படத்தைப் பற்றி மூச்சே விடமால் சொல்லி முடித்த அபர்ணதி, ஆர்யாவுடனான நட்பு பற்றிச் சொல்கிறார்.
அபர்ணதி
“`எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டி அதிகமாகியிருக்குனு நினைக்கிறேன். ஏன்னா, ஆர்யாவுக்கும் சயீஷாவுக்குமான கல்யாண செய்தியைக் கேட்டு அழமா இருக்கேன். நான் ஏன் அழணும்?
`ஜெயில்’ படத்தோட உதவி இயக்குநர் ஒருத்தர் எப்போவுமே ஆர்யா பற்றிய செய்திகளை எனக்கு அனுப்புவார். அவர்தான் இந்தச் செய்தி வந்ததையும் எனக்கு அனுப்பியிருந்தார்.
தூங்கி எந்திரச்சதும் முதலில் அதைத்தான் படிச்சேன். ஆனா, நான் அது வதந்தியா இருக்கும்னு கடந்துட்டேன். ஏன்னா, ஆர்யாவுக்குக் கல்யாணம் ஆகப்போகுதுனா, அதைக் கண்டிப்பா ஆர்யாவே ட்வீட் பண்ணி அதிகாரபூர்வமா சொல்லியிருப்பார்.
அப்படி எதுவுமே நடக்கல. அதேமாதிரி, சயீஷாவும் இதைப் பற்றி எங்கேயும் பேசலை. அதனால, இப்போவரைக்கும் வதந்தியா இருக்கும்னுதான் நான் நம்புறேன்.
இந்த வருடம் காதலர் தினத்தைக்கூட நான் பார்வைக் குறைபாடு உள்ளவர்களோடுதான் சேர்ந்து கொண்டலாம்னு முடிவு பண்ணியிருக்கேனே தவிர, ஆர்யாகூட இல்லை.
இன்னும் சொல்லப்போனா, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நானும், ஆர்யாவும் பார்த்துக்கக்கூட இல்லை. மெசேஜ்லகூட அதிகமா பேசிக்கமாட்டோம். எங்களுக்குள்ள இருக்கிற நட்பு இவ்ளோதான்.
இப்போ, நான் என் சினிமா கரியர்லதான் முழுக் கவனத்தையும் செலுத்துறேன். நல்ல கதைகளைத் தேடிக்கிட்டு இருக்கேன். வில்லி கேரக்டரா இருந்தாலும் எனக்கு ஓகேதான்!” என்று முடித்தார், அபர்ணதி.