நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் பிப்ரவரி 11-ம் தேதியன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி, திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கிவிட்டது. தனது அரசியல் நிலைப்பாட்டை இன்னும் ரஜினி அறிவிக்கவில்லை.
உறுதியாக நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். பிரதமர் மோடி, பதவிக்கு வருவதற்கு முன், ரஜினியின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருந்தார்.
இருவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருக்கமானவர்கள். இடையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவைப்பார்த்து, பி.ஜே.பி-க்கு பின்னடைவு என்று வெளிப்படையாக ரஜினி கருத்து சொன்னார்.
இது பி.ஜே.பி-யின் டெல்லி தலைவர்களை முகம் சுளிக்கவைத்தது. மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, பி.ஜே.பி-யின் முன்னணி வரிசைக்கு வந்துகொண்டிருக்கிறார்.
இவரை ரஜினி ஆதரிக்கிறார் என்பது பி.ஜே.பி-யின் ஒருதரப்பினர் நினைக்கிறார்கள். அந்தவகையில், மோடி ஆதரவு பிரமுகர்கள் ரஜினியைத் தள்ளிவைத்து பார்க்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், மகள் திருமணத்தை பிப்ரவரி 11-ம் தேதி நடத்த நாள் குறித்தார் ரஜினி. பிரதமர் மோடியின் திருப்பூர் விசிட்டுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்கு நாள் தேர்வானது. திருப்பூர் வருகிற பிரதமர், சென்னை வந்து ரஜினி குடும்பத்து மணமக்களை வாழ்த்திவிட்டுப்போவார் என்கிற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடையே எழுந்தது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இருந்தபோதிலும், போனில் மணமக்களுக்கு மோடி வாழ்த்து சொன்னார். தனக்கு பி.ஜே.பி சாயம் பூசுவார்கள் என்பதால், நேரிடையாக டெல்லிக்குப்போய் பிரதமரிடம் பத்திரிகையை ரஜினி கொடுக்கவில்லை.
திருமண தகவலை மட்டும் தனி சேனலில் பிரதமருக்கு ரஜினி தெரியப்படுத்தினார் என்கிறார்கள் சிலர். இன்னொரு தரப்பினரோ, நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ஆர்வம் காட்டாததால், மோடிக்குப் பிடிக்கவில்லை.
அதனால், பத்திரிகையை நேரில் கொண்டுவந்து கொடுக்கவே டயம் கொடுக்கவில்லை. தேர்தல் பிஸி. ஒரே நாளில் மூன்று மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, மோடி வராமல் ரஜினி வீட்டுத் திருமணம் நடந்துமுடிந்தது.
திருநாவுக்கரசர்
காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டுக்கு நேரில் போனார் ரஜினி, ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை வீட்டுக்கு அவர் போகாமல் மனைவி லதாவிடம் பத்திரிகையைக் கொடுத்தனுப்பினாராம் ரஜினி.
அதனால், ரஜினி நடத்திய குடும்ப விழாவுக்கு மட்டும் விசிட் அடித்தார் தமிழிசை. கடந்த 8-ம் தேதியன்று ராகவேந்திரா மண்டபத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட சந்திப்பு நடந்தது.
முக்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சன் டிவி கலாநிதிமாறன் கலந்துகொண்டார். பிப்ரவரி 10-ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி வீட்டுக்குச் சென்று நேரில் பத்திரிகை கொடுத்தார் ரஜினி, இதேபோல், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் நேரில் பத்திரிக்கை கொடுத்தாராம் ரஜினி.
அழகிரி
இதைத்தான் அ.தி.மு.க-வினரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. முன்பு ஒரு சமயத்தில், ரஜினியும் கடம்பூர் ராஜும் சந்தித்தபோது, திருமணம் பற்றியும் பேசிக்கொண்டார்களாம்.
அப்போது கொடுக்கப்பட்ட உறுதிமொழி அடிப்படையில், ரஜினியே நேரில் சென்று பத்திரிகை கொடுத்தாராம். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் இல்லாததால், அவருடன் போனில் பேசிவிட்டு சென்னையில் உள்ள அவரின் மகன் வீட்டுக்குப் பத்திரிகை கொடுத்தனுப்பினார் ரஜினி.
தாலிகட்டும் வைபவத்தை போயஸ்கார்டன் வீட்டில் வைத்துக்கொள்ளவே முதலில் திட்டமிட்டாராம் ரஜினி. நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கடைசி நிமிடத்தில், வி.வி.ஐ.பி-க்கள் வருவதை கருத்தில் கொண்டு, தாலிகட்டும் வைபத்தையும் நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார் ரஜினி.
வரவேற்பு நாளன்று காலை சட்டசபைக்கு செல்வதற்கு முன், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் 20 நிமிடங்கள் வரவேற்பில் இருந்தனர்.
அடுத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரும்போது, மெயின் ரோட்டில் சில நிமிடங்கள் அவரது கார் நின்றது. தி.மு.க அழகிரி இருக்கிறாரா? என்று ஸ்டாலின் தரப்பினர் ரஜினி தரப்பினரை தொடர்புகொண்டு விசாரித்தனர்.
அழகிரி வரவில்லை என்றதும், ஸ்டாலின் உள்ளே வந்தராம். இவர் வந்துபோனதும் மு.க.அழகிரி உள்ளே வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப் போனாராம்.