“பார்த்திபனின் அந்தச் சாதுர்யம்– விஷால்
05 Feb,2019
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசினார் நடிகர், விஷால்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் `இளையராஜா 75′ விழா தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்துப் பேசினார்.
இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக `இளையராஜா 75′ என்ற பெயரில் பாராட்டு விழா நடந்தது.
ரஜினி, கமல் தொடங்கி ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விழா நடந்து முடிந்தது.
விழாவில், தமிழகக் காவல்துறைப் பாதுகாப்பு அளித்ததற்காகவும், விழாவை நடத்த அனுமதி கொடுத்ததற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினார், நடிகர் விஷால்.
சந்திப்பிற்குப் பிறகு, வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷால், “இளையராஜாவின் 1000 படங்கள் சம்பந்தப்பட்ட ஒரு `காபி டேபிள்’ புத்தகத்தை முதலமைச்சரைச் சந்தித்துக் கொடுத்தோம்.
ஏற்கெனவே வலியுறுத்திய, தியேட்டர் வரிகள் சம்பந்தப்பட்ட கோரிக்கையை மீண்டும் முன் வைத்தோம். ஆங்கிலத் திரைப்படங்கள் வெளியாகும்போது கொடுக்கப்பட்டும் முக்கியத்துவம், தமிழ்த் திரைப்படங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ஒரு கோரிக்கையை வைத்தோம்.
மேலும், தமிழ் சினிமா சார்ந்து நடக்கப்போகும் விஷயங்களுக்கு, தமிழக அரசின் உதவி வேண்டும் என்பதையும் சொன்னோம்.” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் பார்த்திபனின் பதவி விலகல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷால், “பார்த்திபனுடைய பெயர் சினிமாவைத் தாண்டி, வரலாற்றில் பதிவாக்கப்பட வேண்டிய விஷயம்.
அவர் செய்த விஷயத்தை இனி யாராலும் செய்ய முடியாது. அவருடைய தனிநபர் முயற்சியால்தான், ஒரே மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைக்க, இளையராஜா சார் பாடினார்.
இதை முகேஷ் அம்பானி வீட்டுக் கல்யாணத்திலேயோ அல்லது வேறு எந்த கோடீஸ்வரர் வீட்டுக் கல்யாணத்திலேயோகூட பார்க்க முடியாது. எவ்வளவு கோடி கொடுத்தாலும் இது சாத்தியமில்லை. இந்த முயற்சி முழுவதும் பார்த்திபன் சாருடையது.” என்று பதிலளித்தார்.
இதைத் தொடர்ந்து, பாரதிராஜா, வைரமுத்து போன்றவர்கள் கலந்துகொள்ளாதது தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு விஷால், “எல்லோருக்குமே அழைப்பு போயிருந்தது. இன்னொரு விஷயம், இது யாருக்காகப் பண்றோம்னு ஒண்ணு இருக்கு.
விழாவுக்கு வர்றதும், வராததும் அவங்களுடைய தனிப்பட்ட விருப்பம். அவங்க ஏன் வரலைனு கேட்க இது ஸ்கூல் ஃபங்ஷன் இல்லை” என்றவரிடம், `தமிழ் ராக்கர்ஸ்’ குறித்தும், வசந்த பாலன் எழுப்பிய சர்ச்சை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலே கைகாட்டி, “நான் சொல்றது கடவுளை இல்லை, கடவுளாக நம்புற இந்த அரசாங்கத்தை! அவங்க நினைத்தால் ஒரே நாள்ல இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்.
அதுக்கும் கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம். அவங்க நினைச்சாதான், ஒரே நாள்ல பைரஸியை ஒழிக்க முடியும்.
மேலும், வசந்த பாலன் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து. இதே, `நான் ஒரு திருடனைப் பிடிச்சிட்டேன்’னு என் முன்னாடி சொன்னா, நான் தலை குனிந்து நின்னிருப்பேன்.
இப்போவும், கூட வாங்க போராட்டம் பண்ணுங்கனுதான் சொல்றேன்” என்று பதிலளித்தார். மேலும், “இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பார்த்திருக்காங்க.
இது இளையராஜா சாருக்கு நாங்க செய்ய வேண்டிய கடமை. கூடிய சீக்கிரம் இதைத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புவாங்க. நன்றி!” என முடித்துக்கொண்டார்.