'இளையராஜா பாராட்டு விழா வழக்கு'
29 Jan,2019
திரைப்பட தயாரிப்பாளர்களான ஜே.எஸ்.கே.சதிஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இளையராஜாவுக்காக 'இளையராஜா-75' என்ற பெயரில் பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆனால் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால் உள்ளிட்ட சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர். ஏற்கெனவே சங்கத்தில் பல கோடி ரூபாய்க்கு நிதிமுறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போதும் ரூ.7.53 கோடி அளவுக்கு முறையான கணக்குகளைக் காட்டவில்லை.
இந்தச் சூழலில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தி ரூ.3.5 கோடி வழங்குவது ஏற்புடையதல்ல. இதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கூட்ட உத்தரவிட வேண்டும். முறையான கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாமல், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, "இந்தப் பாராட்டு விழாவை ஏன் 2 வாரங்களுக்கு தள்ளிப்போடக்கூடாது" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "ஏற்கெனவே இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். சுமார் 3,500 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்கவுள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். மனுதாரர்கள் மட்டும்தான் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதி, ''இளையராஜாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடர்பான நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ள மற்றும் வசூலிக்கப்பட்டுள்ள தொகை குறித்த கணக்கு விவரங்களை புதன்கிழமைக்குள் (ஜன. 30) அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.